காஞ்சிபுரத்தை உலுக்கிய கொள்ளையர்கள்.. 100 சிசிடிவி காட்சிகளை வைத்துப் பிடித்த போலீஸ்.. மக்களே உஷார்
Kanchipuram News: சிசிடிவிகளின் அடிப்படையில் காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலைய தனிப்படை போலீசார் நடவடிக்கை.

காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளில் கதவுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட பலே திருடர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற கொள்ளை சம்பவங்கள்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரைப்பேட்டை வேதமாணிக்க நகர், புஞ்சை அரசதாங்கள், வேதாசலம் நகர் ஆகிய பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தது.
அதேபோன்று வாலாஜாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ்ஒட்டிவாக்கம், ஊத்துகாடு மற்றும் அருகில் உள்ள சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து, இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடுவதும், வீட்டிற்கு வெளியே உள்ள கார், இருசக்கர வாகனங்கள், உள்ளிட்டவற்றை திருடுவதகாக தொடர் புகார்கள் காவல் நிலையங்களுக்கு வந்து கொண்டிருந்தது.
போலீசார் தீவிர விசாரணை
இது போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் காரணமாக காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சுமார் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து வடக்கு மண்டல ஐஜி. அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில், காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் மேற்பார்வையில் மேற்படி குற்றவழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் நேரடி மேற்பார்வையில் காஞ்சிபுரம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
100 சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை
தனிப்படை போலீசார் குற்ற சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தும், காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வரையில் உள்ள 100-க்கு மேற்பட்ட CCTV கேமராக்களை ஆய்வு செய்ததில், மேற்படி குற்ற சம்பவங்களில் ஈடுப்பட்ட குற்றவாளிகள் சென்னை பல்லாவரம் பம்மல் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து CCTV கேமராக்களில் கிடைத்த குற்றவாளிகளின் புகைப்படம் மூலமும் தனிப்படைக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரிலும் சென்னை பல்லாவரம் பம்மல் பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன், சுரேஷ் ,அம்பத்தூர் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பரிபாய்தீன் ஆகிய 3 பேர் குற்றவழக்கில் ஈடுபட்டது தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
குற்றவாளிகள் கைது
மேற்படி எதிரிகள் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுவர் மாவட்டங்களில் பல்வேறு திருட்டு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வந்த நிலையில், தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் தலைமையில் நேற்று முன்தினம் மிலிட்டரி ரோடு பகுதியில் தனிப்படை போலீசாருடன் திடீர் வாகன தணிக்கை செய்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் சதாம் உசேன், சுரேஷ்,பரி பாய்தீன், என்பதும் மீண்டும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட சென்றதும் தெரிய வந்தது.
தங்க நகைகள் பறிமுதல்
இதனைத் தொடர்ந்து மூவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு அவர்களிடமிருந்து 25 சவரன் தங்க நகைகள், 01 வைர மோதிரம், 340 கிராம் எடைக்கொண்ட வெள்ளி பொருட்கள், மாருதி சுசூகி ஈகோ கார்கள் 3, ஆட்டோக்கள் 2. யமஹா மோட்டார் சைக்கிள் ஒன்று லேப்டாப் 1 செல்போன்கள் 2 உள்ளிட்ட சுமார் 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள திருடிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமும், பூட்டை உடைக்க பயன்படுத்தும் இரண்டு இரும்பு ராடுகளையுஉம் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து குற்றவாளிகள் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆசை படுத்தி காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலைய போலீசார் சிறையில் அடைத்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

