Cyber crime: ஆன்லைன் மோசடியால் ரூ.9 லட்சம் பணத்தை இழந்த வாலிபர் - சைபர்கிரைம் போலீஸ் விசாரணை
மரக்காணம் அருகே டாஸ்கை முடித்தால் பணம் கூடுதலாக கிடைக்கும் என நம்பி 9 லட்சத்தை இழந்த வாலிபர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் செல்டன் வினோத் (வயது 30). இவருக்கு கடந்த மார்ச் 25-ந் தேதி வாட்ஸ் அப் எண்ணுக்கும், டெலிகிராம் ஐ.டி. மூலமும் பகுதி நேர வேலை என்ற பெயரில் சிறிய முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம், அதற்கு டாஸ்க் முடிக்க வேண்டும் என்றுகூறி மர்ம நபர்கள் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அதோடு அவர்கள் ஒரு லிங்கையும் அனுப்பியிருந்தனர்.
இதை உண்மையென நம்பிய செல்டன் வினோத், அந்த லிங்கிற்குள் சென்று பாஸ்வேர்டு கொடுத்து ஐ.டி.யை பதிவேற்றம் செய்துள்ளார். அப்போது முதலில் ரூ.1,000 செலுத்தி டாஸ்க் முடித்து ரூ.1,200 பெற்றுள்ளார். பின்னர் ரூ.3 ஆயிரம் செலுத்தி ரூ.4,200 பெற்றுள்ளார். தொடர்ந்து அவர்கள் கூறியவாறு அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் 25 தவணைகளாக மொத்தம் ரூ.9 லட்சத்து 40 ஆயிரத்து 200 அனுப்பியுள்ளார். ஆனால் அவர்கள் கூறியவாறு டாஸ்கை முடித்த பிறகும் செல்டன் வினோத்துக்கு பணத்தை அனுப்பவில்லை. பின்னர் தான் நூதன முறையில் பணமோசடி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட செல்டன் வினோத், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை மோசடி செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கூருகையில் இதுபோன்ற மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர், மேலும் தங்களின் மொபைல் எண்ணிற்கு ஏதேனும் லிங்க் வந்தால் அதனை நீக்கி விடுங்கள் என சைபர் கிரைம் போலீசார் கூறுகின்றனர். அனுபவம் இல்லாத எண்ணில் இருந்து குறுஞ்செய்திகள் வந்தால் அந்த லிங்க் போன்றவற்றை கிளிக் செய்ய கூடாது, நீங்கள் அதனை கிளிக் செய்தவுடன் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடுவார்கள் எனவே அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறினார்.
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்