’கஞ்சா தின்ற எலிகள்..’ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்த நீதிமன்றம்
11 கிலோ கஞ்சாவை எலி தின்றுவிட்டதாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டதால், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சினிமா காட்சி போன்ற நிகழ்வு நடைபெற்றுள்ளது. சென்னையில் உள்ள மாட்டான் குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜகோபால், நாகேஸ்வராராவ் ஆகிய இருவர் 22 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்தது. மிகப்பெரிய அளவில் கஞ்சா கைப்பற்றப்பட்டதால், இதில் வேறு யார் யார் எல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள், இவர்களுக்கு எங்கிருந்து கஞ்சா வருகிறது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் இவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று அதாவது ஜூலை 4ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது கைப்பற்றப்பட்ட கஞ்சாவில் 100 கிராம் கஞ்சாவை, எடுத்து 50 கிராம் நீதிமன்றத்தில் சமர்பிக்கவும், 50 கிராம் கஞ்சா சோதனை செய்வதற்காக ஆய்வுக்கூடத்துக்கும் அனுப்பப்பட்டதாக காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டது. இதுவரை காவல் துறைக்கு சாதகமாக சென்று கொண்டிருந்த இந்த வழக்கில், இதன் பின்னர், நீதிமன்றத்தில் காவலர்கள் கூறியதுதான் இந்த வழக்கில் ட்விஸ்டே. அதாவது காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மீதமுள்ள 21.9 கிலோ கஞ்சாவில், 11 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டுவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கவில்லை, இதையடுத்து, காவல்துறை தரப்பில் சமர்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் உள்ளபடி 21.9 கிலோ கஞ்சாவை சமர்பிப்பதற்கு பதிலாக குறைவான அளவில் கஞ்சாவை சமர்ப்பித்ததால், குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, இருவரையும் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு காவல் துறைக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் சினிமா காட்சிகளைப் போல் இருப்பதாக பலரும் கூறிவருகின்றனர்.
ஏற்கெனவே, இதேபோன்றதொரு மற்றொரு வழக்கில் கோயம்பேடு காவல் நிலையத்தின் சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதில் 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் 11 கிலோ கஞ்சாவை மட்டுமே அந்த வழக்கில் காவல் துறையினர் சமர்ப்பித்தனர். மீதமுள்ள கஞ்சாவை எலி சாப்பிட்டுவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.