Crime: நெல்லை அருகே கடத்தப்பட்ட 5 வயது பெண் குழந்தை - 36 மணி நேரத்தில் மீட்ட போலீசார்!
”சிசிடிவி கேமரா மற்றும் நவீன தொழில் நுட்ப உதவியுடன் அம்பாசமுத்திரம் அருகே கடத்தப்பட்ட 5 வயது பெண் குழந்தை 36 மணி நேரத்தில் மீட்பு”
நெல்லை மாவட்டம் கீழ பாப்பாக்குடி சேர்ந்தவர் கார்த்திக் - இசக்கியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு 5 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த சூழலில் கடந்த 20ம் தேதி அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த இசக்கியம்மாள் தனது குழந்தையை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அருகே உள்ள பாப்பாகுடி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்து உள்ளார். அதன் பேரில் நெல்லை மாவட்ட எஸ். பி சரவணன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மேலும் தீவிர தேடுதலில் ஈடுபட்ட காவல்துறையினர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து உள்ளனர்.
அதன் அடிப்படையில் காணாமல் போன குழந்தையை 36 மணி நேரத்தில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் கண்டுபிடித்தனர். இந்நிலையில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட கனியம்மாள், முத்துச்செல்வி மற்றும் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் ஆகிய மூன்று பேரை அம்பாசமுத்திரம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரான்சிஸ் கூறுகையில், இசக்கியம்மாள் அனைவரிடமும் எதார்த்தமாக பழக கூடியவர், அதனால் அருகே உள்ளவர்களை நம்பி குழந்தையை கொடுத்து விடுவார். இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு இசக்கியம்மாளின் வீட்டிற்கு அருகே வசிக்கும் கனியம்மாள், முத்துச்செல்வி ஆகிய இருவரும் சேர்ந்து குழந்தையை திருடிச் சென்று உள்ளனர். காவல் ஆய்வாளர் சந்திரமோகன் மற்றும் எனது தலைமையில் தீவிர தேடுதல் நடத்தி 36 மணி நேரத்தில் குழந்தை கண்டு பிடிக்கப்பட்டது.
கடத்திய பெண்கள் இருவரும் ஆலங்குளத்தை சேர்ந்த கார்த்திகேயனிடம் குழந்தையை கொடுத்து உள்ளனர். கார்த்திகேயனின் உறவினர் ஒருவர் குழந்தை இல்லாமல் இருப்பதால் அவர்களுக்கு இந்த குழந்தையை கொடுக்க முடிவு செய்து கொண்டு சென்றுள்ளார். ஆனால் சிசிடிவி கேமரா மற்றும் செல்போன் உதவியுடன் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி குழந்தை மீட்கப்பட்டது என தெரிவித்தார்.
மேலும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பத்திரமாக வளர்க்க வேண்டும். வீட்டிற்கு வரும் விருந்தினர், அக்கம்பக்கத்தினர் என யாரையும் நம்பி தேவை இல்லாமல் குழந்தைகளை அனுப்பி வைக்க வேண்டாம். தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் தான் பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் இக்குழந்தை கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திக்கேயன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.