அடுத்தது ஐஐடியா? சென்னை ஐஐடி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- முடியைப் பிடித்திழுத்து அட்டகாசம்!
வட மாநில இளைஞர் ஒருவர், கட்டையைக் காட்டி மிரட்டி, முடியைப் பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

சென்னை ஐஐடியில் தனியாக நடந்துசென்ற மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வட மாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டையைக் காட்டி மிரட்டி, முடியைப் பிடித்து பாலியல் சீண்டல்
சென்னை, கிண்டியில் மத்திய அரசின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஐஐடி சென்னை இயங்கி வருகிறது. இங்கு 20 வயது மாணவி படித்து வருகிறார். அவர் தனியாக நடந்து சென்றபோது, வட மாநில இளைஞர் ஒருவர், கட்டையைக் காட்டி மிரட்டி, முடியைப் பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
மிரட்டிய வட மாநில இளைஞரிடம் இருந்து தப்பித்த மாணவி, அங்கிருந்த காவலாளிகளிடம் சென்று புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நிர்வாகத்தினர் சென்னை கோட்டூர்புரம் காவல்துறையில் புகார் அளித்தனர்.

உணவக கடை ஊழியர் கைது
இதில், விசாரணைக்குப் பிறகு ஐஐடி வளாகத்தில் இயங்கும் ’மும்பை சாட்’ என்னும் உணவக கடை ஊழியர் ரோஷன் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில், ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். பலகட்ட விசாரணைக்குப் பிறகு அவருக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






















