TNEA Cutoff: வெளியான தரவரிசை; உயரும் பொறியியல் கட் ஆஃப் மதிப்பெண்கள்- என்ன செய்யணும்? கல்வியாளர்கள் அட்வைஸ்!
TNEA Cutoff 2025: 99 முதல் 200 மதிப்பெண்கள் வரை இந்த ஆண்டு கட் ஆஃப்ஃபில் எந்த மாற்றமும் இல்லை. 199.5 முதல் 198 மதிப்பெண்கள் வரை கட் ஆஃப் மதிப்பெண்கள் 0.5 அளவுக்கு அதிகரித்துள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான பொறியியல் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியானது இதில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள், 195-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் உயரும் என்று கல்வியாளர்கள் கணித்துள்ளனர்.
இதுகுறித்து கல்வியாளர்கள் ஜெயப்பிரகாஷ் காந்தி, அஸ்வின் ஆகியோர் கூறி உள்ளதாவது:
2025ஆம் ஆண்டு 141 பேர் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இதுவே கடந்த ஆண்டு 65 மாணவர்கள் மட்டுமே முழு மதிப்பெண்களைப் பெற்று இருந்தனர். 190 மதிப்பெண்களுக்கு மேல், 8,813 மாணவர்கள் இருந்த நிலையில் இந்த ஆண்டு,13,958 மாணவர்கள் உள்ளனர்.
உயர்ந்த செயல் திறன்
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த முறை மாணவர்களின் செயல் திறன் அதிகமாக உள்ளது. 41 ஆயிரம் மாணவர்களுக்கு அதிகமாக இந்த முறை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
இதன்படி, 199 முதல் 200 மதிப்பெண்கள் வரை இந்த ஆண்டு கட் ஆஃப்ஃபில் எந்த மாற்றமும் இல்லை. 199.5 முதல் 198 மதிப்பெண்கள் வரை கட் ஆஃப் மதிப்பெண்கள் 0.5 அளவுக்கு அதிகரித்துள்ளது. அதேபோல, 198 முதல் 197 வரை 1 கட் ஆஃப் மதிப்பெண் உயர்ந்துள்ளது.
கட் ஆஃப் மதிப்பெண்கள் என்னவாகும்?
மேலும், 197 முதல் 196 வரை 1.5 கட் ஆஃப் மதிப்பெண்கள் அதிகரித்துள்ளன. 196 முதல் 194.5 வரை 2 கட் ஆஃப் மதிப்பெண்களும் 194.5 முதல் 191.5 வரை 2.5 கட் ஆஃப் மதிப்பெண்களும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 191.5 முதல், 190 மதிப்பெண்கள் வரை 3 கட் ஆஃப் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 190 முதல் 188 மதிப்பெண்கள் வரை 3.5 மதிப்பெண்கள் வரை உயர்ந்துள்ளது. 188 மதிப்பெண்கள் முதல் 186.00 மதிப்பெண்கள் வரை 4 கட் ஆஃப் உயர்ந்துள்ளது. அடுத்தடுத்த மதிப்பெண்களுக்கு, இந்த ஆண்டு கட் ஆஃப் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
எவ்வளவு மதிப்பெண்கள்?
195 மதிப்பெண்களுக்கு மேல் சுமார் 2.5 மதிப்பெண்களும் 190 மதிப்பெண்களுக்கு மேல் சுமார் 4 மதிப்பெண்களும் உயர உள்ளன. 180 மதிப்பெண்களுக்கு மேல் 6.5 கட் ஆஃப் மதிப்பெண்களும் 170 மதிப்பெண்களுக்கு மேல் 9.5 மதிப்பெண்களும் உயர வாய்ப்பு உள்ளது.
அதேபோல 150 மதிப்பெண்களுக்கு கட் ஆஃப், சுமார் 15 மதிப்பெண்களுக்கு மேல் உயர உள்ளது. இதனால் மாணவர்கள் சாய்ஸ் ஃபில்லிங்கில் அதிக அளவிலான தேர்வுகளைக் கொடுத்து, நல்ல கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.
இவ்வாறு கல்வியாளர்கள் ஜெயப்பிரகாஷ் காந்தி, அஸ்வின் ஆகியோர் தெரிவித்தனர்.






















