NPS Vatsalya: குழந்தைகளுக்கான புதிய சேமிப்பு திட்டம் - என்பிஎஸ் வாத்சல்யா என்றால் என்ன? தொடங்குவது எப்படி? பலன்கள் என்ன?
NPS Vatsalya: மத்திய அரசு கொண்டுவந்துள்ள என்பிஎஸ் வாத்சல்யா என்ற குழந்தைகளுக்கான புதிய சேமிப்பு திட்டம் பற்றி இந்த தொகுப்பில் அறியலாம்.
NPS Vatsalya: மத்திய அரசு கொண்டுவந்துள்ள என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தின் முழு பலன்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு பட்ஜெட்:
குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்க விரும்பும் பெற்றோருக்காக மத்திய அரசு புதிய சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து, அவர்களுக்கு நீண்ட கால சேமிப்பு/முதலீட்டை மேற்கொள்ள புதிய வழி கிடைத்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு, கடந்த 23ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம்பெற்று இருந்தது.
NPS வாத்சல்யா திட்டம்:
சிறார்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டம் "NPS வாத்சல்யா". இந்தத் திட்டம் தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் இயங்குகிறது. என்பிஎஸ் வாத்சல்யாவின் கீழ், பெற்றோர்கள் தங்கள் மைனர் குழந்தைகளின் பெயரில் கணக்கைத் தொடங்கி பணத்தை டெபாசிட் செய்யலாம். அதன்படி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களால் கணக்கை திறக்க முடியும். என்.பி.எஸ் வாத்சல்யா திட்டம், அந்த குழந்தைகளுக்கு 18 வயது முடிந்தவுடன் வழக்கமான என்.பி.எஸ் திட்டமாக மாற்றப்படும். என்பிஎஸ்ஸில் சிறார்களுக்கு கணக்கு தொடங்கும் வசதி, இந்த செய்தியை பதிவும் செய்யும் வரையில் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
NPS வாத்சல்யா விதிகள்:
பொது NPS திட்டத்திற்கு பொருந்தும் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள், NPS வத்சல்யா திட்டத்திற்கும் பொருந்தும். இதில் புதிய விஷயம், இதுவரை இல்லாத வகையில் குழந்தையின் பெயரில் கணக்கு தொடங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வருமான வரி சேமிப்பு:
தேசிய ஓய்வூதிய அமைப்பில் நீண்ட கால, ஒழுக்கமான முதலீட்டிற்கான கூட்டு வட்டியுடன் இணைந்து பெரிய அளவிலான செல்வத்தை உருவாக்க முடியும். பொது வருங்கால வைப்பு நிதி (PPF) போலவே, நீண்ட கால முதலீட்டு விருப்பமாக NPS மிகவும் பிரபலமாகிவிட்டது.
NPS இல் முதலீடு செய்தால் வருமான வரிச் சலுகைகளும் கிடைக்கும். ஒரு நிதியாண்டில் வருமான வரியின் 80C பிரிவின் கீழ் இந்தக் கணக்கில் செய்யப்பட்ட பங்களிப்பு ரூ. 1.50 லட்சம் வரை விலக்கு பெறலாம். இது தவிர, பிரிவு 80 சிசிடியின் கீழ் மேலும் ரூ. 50 ஆயிரம் விலக்கு கோரலாம். மொத்தத்தில் என்.பி.எஸ்., முதலீடுகளுக்கு ஒரு நிதியாண்டில் ரூ. 2 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெறலாம்.
இந்திய மக்கள் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் மத்திய அரசு 2004 ஆம் ஆண்டு தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (என்பிஎஸ்) அறிமுகப்படுத்தியது. PFRDA அதை ஒழுங்குபடுத்துகிறது. NPS இல் கணக்கு திறக்கும் நேரத்தில் சந்தாதாரர், பங்குகள், கார்ப்பரேட் பத்திரங்கள், அரசுப் பத்திரங்கள் (G-Sec) போன்ற திட்டங்களில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.
முதலீட்டு விவரங்கள்:
NPS இல் அடுக்கு-1 மற்றும் அடுக்கு-2 என இரண்டு வகையான கணக்குகள் உள்ளன. அடுக்கு-1 முதன்மை ஓய்வூதியக் கணக்கு. அடுக்கு-1-ன் கீழ் கணக்கு எடுக்கப்பட்டால், அதில் இருந்து பணம் எடுப்பதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அடுக்கு-2-ன் கீழ் கணக்கு எடுக்கலாமா வேண்டாமா என்பது சந்தாதாரரைப் பொறுத்தது. அடுக்கு-2 கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு எந்தத் தடையும் இல்லை.
NPS உறுப்பினர் ஓய்வு பெற்ற பிறகு அல்லது 60 வயதை அடைந்த பிறகு NPS பணத்தை திரும்பப் பெறலாம். அதுவரை அவரது கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் அதிகபட்சமாக 60 சதவீதத்தை மொத்தமாக எடுக்கலாம். மீதமுள்ள 40 சதவீத பணத்தை வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். இந்தத் திட்டங்களில் இருந்து மாதாந்திர ஓய்வூதியமாக பணம் வருகிறது. இதனால், ஓய்வு பெற்ற பிறகும் நிதிப் பாதுகாப்பு கிடைக்கும்.