நோய் தாக்காத கரும்பு விதை கரணைகள் வழங்க தஞ்சை பகுதி விவசாயிகள் வலியுறுத்தல்
கடந்த சில ஆண்டுகளாக கரும்பில் மஞ்சள் நோய் தாக்குதல் காரணமாக விவசாயிகள் பலரும் வாழை உள்ளிட்ட வேறு பயிர்கள் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியில் கரும்பு நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர. இந்நிலையில் விவசாயிகளுக்கு தேவையான விதை கரணைகள் நோய் தாக்காததாக அரசு இலவசமாக வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். கோடையிலும் நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. மேலும் கடலை, மக்காச்சோளம், கரும்பு, எள், பயறு, போன்றவையும் சாகுபடி செய்யப்படுகிறது. கரும்பு சாகுபடியிலும் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், போதிய மழை இருந்தால் நெல் சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தண்ணீர் குறைந்தால் சாகுபடி பரப்பளவு குறையும்.
தஞ்சை பகுதியில் கரும்பு சாகுபடி
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மாகாளிபுரம்,வீரமாங்குடி, தேவன்குடி, மணலூர், கணபதி அக்ரகாரம், புதுதெரு, உள்ளிக்கடை, பட்டுக்குடி, புத்தூர், கூடலூர் ஆகிய கிராமங்களில் அதிக அளவில் கரும்பு பயிரிடப்படுகிறது. இந்த பகுதிகளில் பெரும்பாலும் அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டுசர்க்கரை தயாரிப்பதற்காகவே கரும்பு பயிரிடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்பாக அறுவடை செய்து வெல்லம் தயாரிக்கும் வகையில் கரும்பு நடவு செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் இந்த ஆண்டு கரும்பு நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கரும்பில் மஞ்சள் நோய் தாக்குதல்
கடந்த சில ஆண்டுகளாக கரும்பில் மஞ்சள் நோய் தாக்குதல் காரணமாக விவசாயிகள் பலரும் வாழை உள்ளிட்ட வேறு பயிர்கள் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கரும்பு பயிரிடும் பரப்பளவு பெருமளவு குறைந்து போனது. இருப்பினும் ஒரு சில விவசாயிகள் மட்டும் தற்போது கரும்பு நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் நோய் தாக்காத விதை கரணைகளை அரசு இலவசமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெல்லம் தயாரிக்க கரும்பு சாகுபடி
இதுகுறித்து கரும்பு விவசாயிகள் தரப்பில் கூறுகையில், பல ஆண்டு காலமாக இந்த கிராமங்களில் வெல்லம், நாட்டுசர்க்கரை தயாரிக்கும் வகையில் கரும்பு நடவு செய்து வருகிறோம். டீசல், உரம் விலை உயர்வு, கூலி ஆட்கள் பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே தொடர்ந்து கரும்பு நடவு செய்து வருகிறோம். இதற்கிடையே மஞ்சள் நோய் தாக்குதலால் கடந்த சில வருடங்களாக கரும்பு விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகிறோம்.
இலவச கரும்பு விதை கரணைகள்
இந்த பாதிப்பிலிருந்து மீள அரசே வேளாண்மை துறை மூலம் கரும்பு விதை கரணைகளை இலவசமாக வழங்க வேண்டும். மேலும் கரும்பு விவசாயிகளுக்கு ஊக்க தொகையும் வழங்க வேண்டும். தொடர்ந்து மும்முனை மின்சாரம் இருந்தால் மட்டுமே தொய்வின்றி கரும்பு நடவு பணிகளை மேற்கொள்ள முடியும். தற்போது இந்த பகுதியில் பகலில் 8 மணி நேரமும், இரவில் 8 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கரும்பு நடவு செய்வதில் தடங்கல் ஏற்படுகிறது. எனவே கரும்பு நடவு செய்வதற்கு ஏற்ற வகையில் தொடர்ந்து மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கரும்பு சாகுபடி உற்பத்தி அதிகரிக்கும். விவசாயிகளும் இன்னும் கூடுதல் பரப்பில் கரும்பு சாகுபடி செய்வார்கள். அதனால் இப்பகுதியில் அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமானோர் பயன் பெறுவார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.