SP Varun kumar Anna Award : அரசின் அண்ணா பதக்கம்! அடித்து ஆடும் வருண்குமார்! "துணிச்சலான SP"
திருச்சியில் கள்ளச்சாராயம், கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் ஆகியவைகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் எஸ்.பி வருண்குமாருக்கு அண்ணா பதக்கம் அறிவித்துள்ளது தமிழக அரசு.
திருச்சி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக வருண்குமார் செய்த முதல் காரியம் பொதுமக்கள் எந்த தயக்கமும் இன்றி நேரடியாக எஸ்.பியை தொடர்புகொண்டு புகார் கொடுக்க பிரத்யேக தொலைபேசி எண்ணை அறிவித்ததுதான். அதில் மக்கள் கொடுத்த அனைத்து புகார்களுக்கும் மாவட்ட போலீசார் மூலமாக உடனுக்குடன் தீர்வு கண்டார். அதன் விளைவாக திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சட்ட விரோத செயல்கள் பெரும் அளவு குறையத் தொடங்கின.
போலீசாரே நெருங்க முடியாத அளவிற்கு திருச்சி மாவட்டத்தில் சில ரவுடிகள் அட்டாகாசம் செய்து வந்தனர். அப்படிப்பட்ட ஒருவர்தான் கொம்பன் என்ற ரவுடி ஜெகன். பலரையும் மிரட்டி வந்த கொம்பன் ஜெகனை போலீசார் பிடிக்கச் சென்ற போது போலீசாரை தாக்கியதாக கூறி என்கவுண்டர் செய்தனர். இது திட்டமிட்ட எண்கவுண்டர் இல்லை என்றும், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தல் கொடுக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் எச்சரித்தார் வருண்குமார்.
அரசியல் கட்சியினர் மீதும் நடவடிக்கைகள் எடுத்து அதிரடி காட்டினார். முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறு செய்யும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். மேலும் வருண்குமார் மீது சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வருண்குமாருக்கு எதிராக சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் தொடர்ந்து விமர்சனங்களை அடுக்கி வந்தார். பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் யுடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.
இப்படி தனது நடவடிக்கைகளால் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வந்தார் வருண்குமார். இந்தநிலையில் அவருக்கு அண்ணா பதக்கம் அறிவித்துள்ளது தமிழக அரசு. காவல்துறையில் சிறப்பாகவும், துணிச்சலாகவும் பணியாற்றிய 107 பேருக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.