”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?
அதிமுக பாஜக கூட்டணிக்கு வர சொல்லி விஜய்யிடம் பவன் கல்யாண் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் அரசியல் எண்ட்ரி கொடுத்த போதே அதிமுக தரப்பில் இருந்து தவெகவுக்கு தூது அனுப்பி வருவதாக பேச்சு இருந்தது. ஆனால் கூட்டணி விவகாரத்தில் விஜய் மந்தமாகவே இருந்ததால் அதிமுக தவெக கூட்டணி சாத்தியப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் முதலமைச்சர் வேட்பாளர் அங்கீகாரத்தை விட்டுக் கொடுக்க விஜய் ரெடியாக இல்லாததும் கூட்டணி அமையாமல் போனதற்கு முக்கிய காரணமாக இருந்தது.
ஆரம்பத்தில் இருந்தே விஜய்யை கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பவர் ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண். ஏற்கனவே பேட்டி ஒன்றில் பவன் கல்யாணிடம், சந்திரபாபு, பவன் கல்யாண் காம்போவை தமிழ்நாட்டில் இபிஎஸ்-விஜய்யுடன் சேர்த்து பேசுவதாகவும், இந்த கூட்டணி அமையுமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு 2014லேயே சந்திரபாபுவுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும், ஆனால் பதவி ஆசை எதுவும் இல்லாமல், மாநிலத்தின் வளர்ச்சியை நோக்கியே தனது நகர்வுகள் இருந்ததாகவும் தெரிவித்தார். இதன் மூலம் முதலமைச்சர் ஆசையை விட்டு கட்சி வளர்ச்சியை நோக்கி சிந்தித்து விஜய் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற மறைமுக மெசேஜை அனுப்பியிருந்தார்.
இந்தநிலையில் கூட்டணிக்கு வர சொல்லி விஜய்யிடம் பவன் கல்யாண் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக கூட்டணிக்கு காங்கிரஸ் வருமா என்ற கேள்வி இருந்த நிலையில், திமுகவுடனேயே கூட்டணியை தொடரும் முடிவை எடுத்தது காங்கிரஸ் தலைமை. அதனால் தனிமரமாக நிற்கும் விஜயை கூட்டணிக்கு கொண்டுவரும் வேலையில் இறங்கியுள்ளார் பவன் கல்யாண். அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாத நிலையில், விஜய் வருகிறாரா என்பதை தெரிந்து கொண்டு தொகுதி பங்கீட்டில் தீவிரமாக இறங்கவிருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
ஆனால் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வரும் விஜய் கூட்டணிக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை என்றே பேச்சு அடிபடுகிறது. இருந்தாலும் விஜயை கூட்டணிக்கு கொண்டு வர ஆசைப்படும் பவன் கல்யாண் கடைசி முயற்சியாக இந்த பேச்சுவார்த்தையில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.























