Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கே
”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கே
காங்கிரஸ் மூத்த தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சித்தது பூகம்பத்தை கிளப்பிய நிலையில், முடிவெடுக்கும் அதிகாரம் எங்களுக்கு தான் உள்ளது என காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே பேசியிருப்பது கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல் நேரத்தில் தொகுதி பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸுக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் மோதல் முற்றியதால், 42 தொகுதிகளிலும் தனித்து களமிறங்குவதாக அறிவித்தார் மம்தா பானர்ஜி. காங்கிரஸ் மூத்த தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரிக்கும், மம்தா பானர்ஜிக்கும் இடையே வார்த்தை போரும் முற்றியது. திரிணாமுல் காங்கிரஸ் பாஜகவின் பி டீம் என்றும், திரிணாமுல் கட்சிக்கு வாக்களிப்பது பாஜகவுக்கு வாக்களிப்பது போன்றது என்றும் விமர்சனங்களை அடுக்கினார்.
சமீபத்தில் பிரச்சாரத்தில் பேசிய மம்தா பானர்ஜி, ‘மத்தியில் இந்தியா கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வருவேன், அதற்கு மேற்கு வங்கத்தில் இருந்து நாங்கள் உதவி செய்வோம். இந்தியா கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்”என சூளுரைத்தார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி அதிர் ரஞ்சன் சவுத்ரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘நான் அவரை நம்ப மாட்டேன். அவர் கூட்டணியில் இருந்து ஓடியவர். அதுமட்டுமல்லாமல் அவர் பாஜகவை நோக்கி செல்கிறார். காங்கிரஸ் கட்சியை அழிக்க வேண்டும் என்றும், 40 தொகுதிகளுக்கு மேல் தாண்ட மாட்டோம் என்றும் இத்தனை நாட்கள் பேசிக் கொண்டிருந்தார். இப்போது காங்கிரஸும் கூட்டணியில் ஆட்சிக்கு வரும் என்பதால் வெற்றி பற்றி தற்போது பேசுகிறார்” என விமர்சித்துள்ளார்.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மம்தா பானர்ஜி தொடர்பாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘இந்தியா கூட்டணிக்கு வெளியே இருந்து ஆதரவு தருவேன் என மம்தா முதலில் கூறியிருந்தார். பிறகு, இந்தியா கூட்டணி ஆட்சியமைத்தால், அந்த அரசுடன் இணைவேன் என்று கூறினார். அப்படியென்றால் அவர் கூட்டணியில் இருக்கிறார் என்றுதான் அர்த்தம். அதிர் ரஞ்சன் சவுத்ரி முடிவுகளை எடுப்பதில்லை, நாங்கள் தான் எடுப்போம். காங்கிரஸ் தலைமை எடுக்கும் அனைத்து முடிவுகளும் சரியாக தான் இருக்கும்” என கூறியுள்ளார். அதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எதிராக கார்கே தெரிவித்துள்ள இந்த கருத்து கட்சிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கூட்டணி வலுவான இருப்பதற்கு கார்கேவின் பதில் உறுதுணையாக இருக்கும் என சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.