(Source: Poll of Polls)
IPL Playoffs: இதுவரை Play-Off சுற்றில் எந்தெந்த அணிகள்.. எவ்வளவு முறை.. ஆல் இன் ஆல் ரிப்போர்ட் இதோ..!
IPL Playoffs: 16 வருட ஐபிஎல் தொடரில் இதுவரை ஒவ்வொரு அணியும் எவ்வளவு முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறித்து இங்கு காணலாம்.
ஐபிஎல் தொடர் கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 16வது ஆண்டாக இந்த தொடர் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் 16வது ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இம்முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி என மொத்தம் நான்கு அணிகள் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் குஜராத் மற்றும் லக்னோ அணிகள் கடந்த ஆண்டு தான் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகின. இந்த அணிகள் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில் 16 வருட ஐபிஎல் தொடரில் இதுவரை ஒவ்வொரு அணியும் எவ்வளவு முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறித்து இங்கு காணலாம்.
1. சென்னை சூப்பர் கிங்ஸ் - 12 முறை
ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டு முதல் உள்ள சென்னை அணி 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. மொத்தம் 14 வருடங்கள் போட்டித் தொடரில் பங்கேற்றுள்ள சென்னை அணி 2008, 2009, 2010, 2011, 2012, 2013, 2014, 2015, 2018, 2019, 2021 மற்றும் 2023ஆம் ஆண்டு என இதுவரை 12 முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று, அதிக முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 12 முறை ப்ளேஆஃப் சென்ற சென்னை அணி அதில் 9 முறை இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ளது. இதில் 4 முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இந்த ஆண்டு இன்னும் முடிவு எட்டப்படவில்லை.
2. மும்பை இந்தியன்ஸ் - 10 முறை
16 வருடங்கள் தொடரில் விளையாடி அதில், 5 முறை சாம்பியன் பட்டத்தினை தன்வசப்படுத்தியுள்ள மும்பை அணி 2010, 2011, 2012, 2013, 2014, 2015, 2017, 2019, 2020 மற்றும் இந்தாண்டுடன் மொத்தம் 10 முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதேநேரத்தில் 6 முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மும்பை அணி அதில் ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது. இந்த ஆண்டு இன்னும் முடிவு எட்டப்படவில்லை.
3. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 8 முறை
ஒவ்வொரு ஆண்டும் ஈ சாலா கப் நம்தே என்ற நம்பிக்கையுடன் களமிறங்கி லீக் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் பெங்களூரு அணி இதுவரை 2009, 2010, 2011, 2015, 2016, 2020, 2021, 2022 என 8 முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதில் மூன்று முறை இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ள இந்த அணி மூன்று முறையும் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த அணியும் 2008ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறது.
4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 6 முறை
ஐபிஎல் தொடரின் ஆஸ்தான அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இந்த அணி இதுவரை 2011, 2014, 2016, 2017, 2018, 2021 என மொத்தம் ஆறு ஆண்டுகள் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதில் மூன்று முறை இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ள இந்த அணி இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. கொல்கத்தா அணியின் முதல் கோப்பை சென்னை அணிக்கு எதிராக வாங்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு சென்னை அணி கோப்பையை வென்றிருந்தால் தொடர்ந்து மூன்று முறை கோப்பையை வாங்கிய அணி என்ற சாதனையைப் படைத்திருக்கும்.
5. டெல்லி கேப்பிடல்ஸ் - 6 முறை
டெல்லி அணியைப் பொறுத்த வரையில் துவக்கத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் இருந்தது. அதன் பின்னர் டெல்லி கேப்பிடல்ஸ் என தனது பெயரினை மாற்றியது. இந்த அணி இதுவரை 2008, 2009, 2012, 2019, 2020, 2021 என மொத்தம் 6 முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதில் ஒருமுறை மட்டும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பினை இழந்தது.
6. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 6 முறை
2013 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் உள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 2013, 2016, 2017, 2018, 2019, 2020 என மொத்தம் 6 முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்த அணி அதில் ஒருமுறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.
7.ராஜஸ்தான் ராயல்ஸ் - 5 முறை
ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட வருடமான 2008ஆம் ஆண்டு கோப்பையை வென்று ஐபிஎல் கோப்பையை முதல் முறை வென்ற அணி என்ற பெருமைக்கு சொந்தமானது. இதுவரை 2008, 2013, 2015, 2018, 2022 என மொத்தம் 5 முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதில் இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது.
8. பஞ்சாப் கிங்ஸ் - 2 முறை
ஐபிஎல் தொடரில் மிகவும் பரிதாபத்துக்குரிய அணி என்றால் அது பஞ்சாப் அணி தான். 2008ஆம் ஆண்டு முதல் உள்ள இந்த அணி தொடக்கத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்ற பெயரில் இருந்தது. அதன் பின்னர் பஞ்சாப் கிங்ஸ் என பெயரை மாற்றிக்கொண்டது. இந்த அணி இதுவரை 16 தொடர்கள் விளையாடி 2008 மற்றும் 2014 என இரண்டு முறை மட்டும் தான் ப்ளேஆஃப் சுற்றுக்கு வந்துள்ளது. இதில் 2014ஆம் வருடம் மட்டும் இறுதிப் போட்டிக்குச் சென்ற அந்த அணி கோப்பையை கொல்கத்தாவிடம் பறிகொடுத்தது.