FIFA Women’s World Cup: தொட்டதெல்லாம் வெற்றி.. என்ன செய்ய காத்திருக்காங்களோ!! இங்கிலாந்து மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு வந்த கதை
FIFA Women’s World Cup: இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின. இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் வென்று அசத்தலாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
FIFA Women’s World Cup: ஃபிஃபா மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடரானது கடந்த 1991-ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தொடர் ஆண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு எவ்வளவு வரவேற்பு உள்ளதோ அதே அளவிலான வரவேற்பை மேற்கத்திய நாடுகள் அளித்து வருகின்றன.
1991ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒரு தொடர் வீதம் இதுவரை 8 தொடர்கள் நடைபெற்றுள்ளன. இந்த ஆண்டு நடைபெறும் 9-வது தொடரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்துகின்றன. எல்லா உலகக்கோப்பை தொடரைப்போலவும் இந்த ஆண்டு வெகு விமரிசையாக கடந்த ஜீலை 20-ஆம் தேதி தொடங்கியது. வழக்கம்போல் இம்முறையும் 32 அணிகளுடன் இந்த தொடர் தொடங்கப்பட்டு இப்போது இறுதிப் போட்டியை எட்டியுள்ளது.
இந்த தொடரில் உள்ள அம்சம் என்னவென்றால் இம்முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இரு அணிகளும் இதுவரை கோப்பையை வெல்லாத அணிகள் மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறாத அணிகள். முதலாவது அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் நாடுகள் மோதின. இந்த போட்டியில் ஸ்பெயின் அணி ஸ்வீடன் அணியை 2-1 என்ற கணக்கில் வென்று முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
அதன் பின்னர் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் வென்று அசத்தலாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இம்முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து அணி இந்த தொடரில் விளையாடிய போட்டிகளின் முடிவு கால்பந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, ’டி’ குரூப்பில் இடம்பெற்ற இங்கிலாந்து மகளிர் அணிதான் விளையாடிய மூன்று லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. தனது முதல் போட்டியில் ஹயாட்டி அணியை 1-0 என்ற கணக்கில் வென்றது.
அதேபோல் தனது இரண்டாவது போட்டியில் டென்மார்க் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கிட்டத்தட்ட தனது கால் இறுதிச் சுற்றை உறுதி செய்தது. அதன் பின்னர் நடைபெற்ற மூன்றாவது போட்டியில், நைஜீரியா அணிக்கு எதிராக முழுநேர போட்டி முடிவில் கோல் எதுவும் அடிக்காமலும் விட்டுக்கொடுக்காமலும் இருந்ததால், போட்டி ஷூட்-அவுட் சுற்றுக்குச் சென்றது. இதில் இங்கிலாந்து அணி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதன் பின்னர் நடைபெற்ற கால் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து அணி கொலம்பியா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. அதேபோல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை அடித்து நொறுக்கி 3-1 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
வரும் 20-ஆம் தேதி அதாவது வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பிரமாண்டமான இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது. இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் இங்கிலாந்து அணி தோல்வியே சந்திக்காமல் தொடர் வெற்றிகளைக் குவித்து வருவதால், இறுதிப் போட்டியிலும் வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் இங்கிலாந்து அணி ரசிகர்கள் உள்ளனர்.