Vikatan: அதிரடி காட்டிய நீதிமன்றம்; ஆனந்த விகடன் இணையதள முடக்கத்தை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவு!
விகடன் இணையதள முடக்கத்தை நீக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம், மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்பான கேலிச் சித்திர விவகாரத்தில் பிரபல வார இதழான ஆனந்தவிகடன் இணையதளம் முடக்கப்பட்டு இருந்த நிலையில், முடக்கத்தை நீக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம், மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே நிலையில் சம்பந்தப்பட்ட கார்ட்டூனை நீக்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனந்த விகடன் சார்பில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விகடன் இணையதளத்தை முடக்க பாஜக தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரில், பிப்ரவரி 15ஆம் தேதி மத்திய அரசு, விகடன் இணையதளத்தை முடக்கியது குறிப்பிடத்தக்கது.
நடந்தது என்ன?
முன்னதாக விகடன் இணைய இதழான `விகடன் ப்ளஸ்’ இதழில் (பிப்ரவரி 10ஆம் தேதி) அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது. இது பாஜக ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டதோடு, பாஜக மாநில தலைவரான அண்ணாமலையால் விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசிடம் புகாராகவும் அனுப்பபட்டது.
கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குவோம்
இதைத் தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பும் வெளியானது. எனினும் இதுகுறித்துப் பேசிய விகடன் நிறுவனம், ’’நூற்றாண்டு காலமாக விகடன் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம், இயங்குவோம்.
ஒரு வேளை இந்த அட்டைப்படம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக விகடன் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது.
இதுதொடர்பான வழக்கில், விகடன் இணையதள முடக்கத்தை நீக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம், மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே நிலையில் சம்பந்தப்பட்ட கார்ட்டூனை நீக்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

