Chandrababu Naidu vs MK Stalin : ’’இந்தி அவசியம்!’’சந்திரபாபு நாயுடு vs ஸ்டாலின் மும்மொழிக்கொள்கை
மும்மொழிக்கொள்கை என்பது இந்தி திணிப்பு என்றும் அது தாய்மொழிகளை அழிக்கும் யுத்தி எனவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்தி கற்றுக்கொள்வது நல்லது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக்கொள்கைக்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே வட மாநிலங்களில் இந்தி ஆதிக்கம் அதிகளவில் உள்ளதால் குஜராத் பீகார், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் தாய்மொழிகள் அழிந்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் தென் மாநிலங்களில் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மும்மொழிக்கொள்கை வந்தால் அது தமிழ் உள்ளிட்ட தாய்மொழிக்கு பேராபத்து என அதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் ஆந்திராவில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் மும்மொழிக்கொள்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,
"மொழி என்பது தொடர்புக்கான ஒரு வழிமுறை மட்டுமே. தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் பிற மொழிகள் உலகளவில் பிரகாசிக்கின்றன என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற கம்பெனிகளின் சி இ ஓக்கள் பற்றி நீங்கள் அறிவீர்கள்.
அறிவு வேறு, மொழி வேறு. மூன்று மொழிகள் மட்டுமல்ல, பல மொழிகளையும் நான் ஊக்குவிப்பேன். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் சர்வதேச மொழிகள் உட்பட 10 மொழிகளை நான் ஊக்குவிக்கப் போகிறேன். மாணவர்கள் அதை கற்றுக்கொண்டு அந்தந்த இடங்களில் சென்று வேலை செய்யலாம்.
தாய்மொழியை ஊக்குவிக்க வேண்டியது அவசியம். வாழ்வாதாரத்திற்கான ஒரு சர்வதேச மொழியாக இருப்பதால், ஆங்கிலத்தையும் ஊக்குவிக்க வேண்டும். மக்களுடன் எளிதில் பழக இந்தி கற்றுக்கொள்வது நல்லது.” எனத் தெரிவித்தார்.





















