T20 WC 2024: அடுத்தடுத்து அதிர்ச்சி! ஜாம்பவான்களை கதறவிடும் கத்துக்குட்டி அணிகள்! அச்சத்தில் சாம்பியன்கள்!
நடப்பு உலகக்கோப்பையில் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் முறையே பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு அதிர்ச்சி தோல்வியை பரிசாக தந்தது ரசிகர்களுக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி20 கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடரின் லீக் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது, நடப்பு டி20 உலகக்கோப்பையில் அமெரிக்கா, கனடா, பப்புவா நியூ கினியா, நேபாளம், நமீபியா, ஓமன், உகாண்டா ஆகிய சிறிய அணிகளும் களமிறங்கியுள்ளது.
கதறவிடும் கத்துக்குட்டி அணிகள்:
வழக்கமாக இதுபோன்று பல அணிகள் களமிறங்கும்போது, பெரிய அணிகளுடான போட்டியில் குட்டி அணிகளாக கருதப்படும் அணிகள் படுதோல்வி அடைவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், இந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில் கத்துக்குட்டி அணிகள் என்று கருதப்பட்ட அணிகள் முன்னாள் சாம்பியன்களுக்கு பாடம் எடுத்த வருகின்றன.
டி20 ஆட்டத்தைப் பொறுத்தமட்டில் அன்றைய தினம் மைதானத்தில் யார் திறமையை வெளிக்காட்டுகிறார்களோ? அவர்களே வெற்றியாளர்கள் ஆக முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இந்த தொடர் அமைந்துள்ளது, அதற்கு அமெரிக்கா – பாகிஸ்தான் இடையேயான போட்டியே சிறந்த உதாரணம் ஆகும். அமெரிக்கா அணிக்கு 160 ரன்கள் இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான், அவர்களை சுருட்டி வீசிவிடலாம் என்று கருதியது.
அடுத்தடுத்து அதிர்ச்சி:
ஆனால், பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை வெளுத்து 159 ரன்கள் எடுத்து, சூப்பர் ஓவரில் ஆட்டத்தை வென்று காட்டி முன்னணி அணிகளுக்கு அச்சத்தை அமெரிக்கா ஏற்படுத்தியது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 139 ரன்கள் இலக்கை நிர்ணயித்த பப்புவா நியூ கினியா அணி 19வது ஓவர் வரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நெருக்கடி அளித்தது.
அதுமட்டுமின்றி, இந்த உலகக்கோப்பையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவமாக நியூசிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணி வாரி சுருட்டி அபார வெற்றி பெற்றது, குர்பாஸ், ஜட்ரான் அதிரடியுடன் நியூசிலாந்து அணிக்கு 160 ரன்களை ஆப்கானிஸ்தான் நிர்ணயித்தது. ஆனால், தரமான கிரிக்கெட் ஆடும் அணி என்று கருதப்படும் நியூசிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணி 75 ரன்களுக்கு சுருட்டி வீசியது. இந்த உலகக்கோப்பைத் தொடரின் மிகப்பெரிய அதிர்ச்சிகளில் இதுவும் ஒன்றாகும்.
யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல:
இந்த தொடரைப் பொறுத்தவரை எந்த அணியும் மற்ற அணிக்கு சளைத்தது அல்ல என்பதற்கு ஏற்றாற்போல, ஒவ்வொரு போட்டியின் முடிவுகள் அமைந்து வருகிறது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் ஓமன் அணியும் சிறப்பாகவே ஆடியது. நேற்று நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணி இலங்கையை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணிக்கு 2வது தோல்வியை பரிசாக தந்தது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக ஸ்காட்லாந்து அணி ஆடிய போட்டியில் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 90 ரன்களை விளாசியது. அந்த போட்டி மழையால் கைவிடப்படாமல் இருந்தால் ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றிருப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
இனி வரும் போட்டிகளில் அமெரிக்கா, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான், உகாண்டா, பப்புவா நியூ கினியா, நேபாளம் ஆகிய நாடுகள் முன்னாள் சாம்பியன்களுக்கு கண்டிப்பாக அதிர்ச்சியை தருவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இதனால், ஜாம்பவான் அணிகள் இவர்களுடன் கவனமாக ஆட வேண்டியது அவசியம் ஆகும்.