AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணி வெளியேற்றப்பட்டுள்ளது.
AFG Vs BAN, T20 Worldcup: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் வங்கதேச அணியை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
ஆஃப்கானிஸ்தான் அணி அபாரம்:
செயிண்ட் வின்செண்டில் உள்ள அர்னோஸ் வாலே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து, வெறும் 115 ரன்களை மட்டுமே சேர்த்தது. இருப்பினும் பந்துவீச்சில் அபார திறனை வெளிப்படுத்தியது. இதனால், வங்கதேச அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் அந்த அணி 105 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி , அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஐசிசி தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு, ஆஃப்கானிஸ்தான் அணி தகுதி பெறுவது இதுவே முதல்முறையாகும். வங்கதேச அணி 12.1 ஓவரில் இலக்கை எட்டி இருந்தால் அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும். ஆனால், அந்த வாய்ப்பை இழந்தது. குறிப்பிட்ட ஓவர்களை கடந்து, இந்த போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று இருந்தால், ஆஸ்திரேலியா அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருக்கக் கூடும். ஆனால், வங்கதேச அணி தோல்வியுற்றதால் ஆஸ்திரேலிய அணியும் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.
முதல் இன்னிங்ஸ் சுருக்கம்:
முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணியில், தொடக்க வீரரான ரஹ்மனுல்லா குர்பாஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 43 ரன்களை சேர்த்தார். அதேநேரம் மறுமுனையில் வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பறிகொடுத்தனர். கேப்டன் ரஷித் கான் இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடி, 10 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்சர்களை விளாசி 19 ரன்களை சேர்த்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் 115 ரன்களை சேர்த்தது. வங்கதேச அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரிஷத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
வங்கதேசத்திற்கு ஆரம்பமே அதிர்ச்சி:
எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. தொடக்க வீரரான டன்ஜித் ரன் ஏதும் எடுக்காமலேயே பெவிலியன் திரும்பினார். அவரை தொடர்ந்து வந்த ஷாண்டோ 5 ரன்களிலும், ஷகிப் அல் ஹசன் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 23 ரன்களை சேர்ப்பதற்குள் அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான லிட்டன் தாஸ் மட்டும் நிலைத்து நின்று ரன் சேர்த்து வந்தார். இதனிடையே, மழை குறுக்கே வந்ததால் போட்டி 19 ஓவர்களாக குறைக்கப்ப்ட்டது.
வங்கதேசம் ஆல்-அவுட்:
மறுமுனையில் வந்த வீரர்களால், ஆஃப்கானிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. இதனால், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். கடைசி 12 பந்துகளில் வங்கதேச அணி வெற்றி பெற 12 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை ஆஃப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் வீசினார். முதல் மூன்று பந்துகளில் மூன்று ரன்களை விட்டுக்கொடுத்தார். தொடர்ந்து நான்காவது பந்தில் டஸ்கின் அஹ்மதை போல்டாக்கிய நவீன் உல் ஹக், ஐந்தாவது பந்தில் முஸ்தஃபிசுர் ரஹ்மானை எல்பிடபள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். இதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில், நவீன் உல் ஹக் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.