Watch Video: "ஆணவத்துல ஆடுன இப்படித்தான்" Instant கர்மாவால் துடித்த இளம் கிரிக்கெட் வீரர்!
ஷூவை காதில் வைத்து வங்கதேச வீரரை வெளியில் போகக்கூறிய நேபாள வீரர் அடுத்த பந்திலே காயம்பட்டு வலியில் துடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. துபாயில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் விளையாடி வருகிறது.
ஷூவை காதில் வைத்து சைகை காட்டிய நேபாள வீரர்:
இந்த தொடரில் நேற்று முன்தினம் நேபாளம் மற்றும் வங்தேசம் அணிகள் மோதின. இதில் வங்கதேச அணிக்கு 142 ரன்களை இலக்காக நேபாள அணி நிர்ணயித்தது. இலக்கை நோக்கி ஆடிய வங்கதேச அணிக்கு நேபாளத்தின் சுழற்பந்து வீச்சாளர் யுவராஜ் கத்ரி இடையூறாக இருந்தார்.
அவரது சுழலில் நிதானமாக ஆடிக் கொண்டிருந்த வங்கதேசத்தின் விக்கெட் கீப்பர் பரீத் ஹாசன் பைசல் 13 ரன்களுக்கு அவுட்டானார். அப்போது, பந்துவீச்சாளர் யுவராஜ் தனது காலில் இருந்த ஷூவை கழற்றி, காதில் வைத்து போன் பேசுவது போல சைகை செய்து தனது கையால் அந்த பேட்ஸ்மேனைப் பார்த்த பெவிலியனுக்குப் போ என்று சைகை செய்தார்.
இதுதான் கர்மாவா?
அந்த ஓவரின் அடுத்த பந்திலே களமிறங்கிய முகமது ரிசானை எல்.பி.டபுள்யூ முறையில் அவுட்டாக்கினார். அடுத்தடுத்து இரண்டு பேரை அவுட்டாக்கிய மகிழ்ச்சியில் மைதானத்தில் துள்ளிக்குதித்து ஓடியபோது யுவராஜின் காலில் சுளுக்கு ஏற்பட்டது. இதனால், அவர் மைதானத்திலே விழுந்து வலியில் துடித்தார். நடக்கக்கூட இயலாத நிலைக்குத் தள்ளப்பட்ட யுவராஜ் கேத்ரியை சக வீரர் தனது தோளில் தூக்கிக் கொண்டு சுமந்து சென்றார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் கீழே பலரும் இதுதான் இன்ஸ்டன் கர்மா என்று பதிவிட்டு வருகின்றனர். மேலும், சிலர் இதற்குத்தான் அதிகமாக ஆடக்கூடாது என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த போட்டியில் யுவராஜ் கேத்ரி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் வங்கதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்கதேசம் அணி 28.4 ஓவர்களில் 142 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஜாவத் அப்ரார் 59 ரன்களையும், கேப்டன் ஹக்கிம் தமின் 52 ரன்களையும் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தனர்.