Thiruppavai 18: மார்கழி 18: இன்றைக்கான ஆண்டாளின் திருப்பாவை பாடல் இதுதான்!
Margali 18: மார்கழி மாதம் 18வது நாளான இன்று, இந்த நாளுக்கு உரிய திருப்பாவை பாடலாக ஆண்டாள் இயற்றியதை காண்போம்.
மார்கழி மாதத்தில் கண்ணபிராணை போற்றி, 30 நாட்களும் 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஆண்டாள் இயற்றியுள்ளார்.
பதினேழாவது பாடல் மூலம், கண்ணனின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் எழுப்புவது போல பாடல் அமைத்த ஆண்டாள், பதினெட்டாவது பாடல் மூலம் நப்பின்னையை எழுப்புகிறார்.
திருப்பாவை பதினெட்டாவது பாடல் விளக்கம்:
மத யானையை படையாக கொண்டவன், புறமுதுகு காட்டாமல் போரிடுபவன் நந்தகோபன். அந்த நந்தகோபனின் மருகளாகிய நப்பின்னையே எழுந்திருப்பாயாக..
யசோதையின் சகோதரரான கும்பகோன் என்பவரது மகள்தான் நப்பின்னை. கும்பகோன், தான் வளர்க்கும் காளையை அடக்குபவருக்குத்தான், என் மகளாகிய நப்பின்னையை திருமணம் செய்து தருவேன் என தெரிவிக்கிறார். அக்காளையை, கண்ணபிரான் அடக்கி நப்பின்னையை திருமணம் முடிக்கிறார்.
இப்பாடல் மூலம் கண்ணபிரானுடைய மனைவியாகிய நப்பின்னையே எழுப்புகிறார் ஆண்டாள்.
நான்கு புறத்திலிருந்து கோழிகள் கூவுகின்றன், குயில்களும் கூவுகின்றன.
பூக்களுக்கே வாசனை தரக்கூடிய கூந்தலை உடைவளே...பூக்கள் போல கைகள் உடைய பெண்ணே...
உன் கையால் கதவை திறந்து விடு. ஏனென்றால், உன் கணவன் பெருமைகளை பாடி, அவன் அருள் பெற வந்துள்ளோம் என ஆண்டாள் பாடல் அமைத்திருக்கிறார்.
திருப்பாவை பதினெட்டாவது பாடல் :
உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தங் கமழுங் குழலீ! கடைதிறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
ஆண்டாள்:
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் தமிழ் புலமை மிக்கவராக திகழ்ந்துள்ளார்.
பக்தி இயக்கம்:
கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.
மார்கழி மாதத்தில், கண்ணபிரானை வைத்து, இலக்கிய நயம் மிக்கதாகவும், உவமை- உருவகத்தை நேர்த்தியாகவும், தமிழை அழகுப்படுத்தி பாடல் அமைத்திருப்பதை காணும்போது, ஆண்டாளின் தமிழ் வளத்தை அறியலாம்.
தொடர்ந்து படிக்க: Thiruppavai 17: மார்கழி 17: அனைவரையும் அரவணைத்து செல்லும் பண்பு: உணர்த்தும் திருப்பாவை பாடல்….
தொடர்ந்து படிக்க: Thiruppavai 4: மார்கழி 4ஆம் நாள்..." வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல" கண்ணனிடம் மழையை கேட்கும் ஆண்டாள்...வியக்க வைக்கும் அக்கால அறிவியல்