தை பெளர்ணமி - சிவாய நம ஓம் என்ற மந்திரங்கள் முழங்க பக்தி பரவசம் பொங்க கிரிவலம் சென்ற பக்தர்கள்...!
கிரிவல பக்தர்கள் சூடம் ஏற்றி வழிபட்டு செல்லும் வழியில் சிவாய நம ஓம் என பஞ்சாக்ஷரம் மந்திரம் உச்சரித்தவாரே சென்றனர்.

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் தை மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசம் பொங்க சிவாய நம ஓம் என்ற மந்திரங்கள் முழங்க கோயிலை சுற்றி கிரிவலம் சென்றனர்.
பிரசித்தி பெற்ற சட்டைநாதர் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் திருக்கோயில் சட்டச் சிக்கல்கள், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லைகள் நீங்க இங்கு பூஜையில் பங்கேற்று வழிபட்டுப் பயன்பெறலாம். இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது.
மூன்று நிலைகளில் சிவபெருமான்
இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது மேலும் காசிக்கு இணையாக அஷ்ட பைரவர்கள் அருள்பாளிக்கும் ஒரே ஸ்தலம் என பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோயில் பல்வேறு வேண்டுதல்களுடன் நாள்தோறும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர்.
தொடரும் சீல் வைக்கும் நடவடிக்கை - 10 மதுபான பார்களுக்கு சீல் வைத்து டிஎஸ்பி அதிரடி நடவடிக்கை...!
பௌர்ணமி கிரிவலம்
இந்நிலையில் இக்கோயிலில் தை மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது. முன்னதாக கிழக்கு ராஜகோபுரம் பிரம்மபுரீஸ்வரர் சுவாமி சந்நிதியில் வழிபாடு மேற்கொண்ட பக்தர்கள், கீழ வீதி வழியாக தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தனர். கிரிவலத்தின் போது ஆபத்து காத்த விநாயகர், கணநாதர், சொர்ணாகர்ஷன பைரவர், சித்திவிநாயகர், கோமளவல்லி அம்மன் ஆகிய கோயில்களில் கிரிவல பக்தர்கள் சூடம் ஏற்றி வழிபட்டு செல்லும் வழியில் சிவாய நம ஓம் என பஞ்சாக்ஷரம் மந்திரம் உச்சரித்தவாரே சென்றனர். முன்னதாக ராஜகோபுரம் வழியாக சுவாமி அம்பாள் வீதி உலா நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர். மேலும் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பு அன்றும் இக்கோயில் சிறப்பு கோ பூஜை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Kidney Damage: இரவில் இந்த அறிகுறிகள் வருகிறதா? சிறுநீரகம் சேதமடைந்து இருக்கலாம் தெரியுமா?

