Palani Kumbabishekam: 16 ஆண்டுகளுக்குப் பின் விமரிசையாக நடந்த பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா
பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின் இன்று விமர்சையாக நடைபெற்று வருகிறது. குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று காலை மிகவும் வெகு விமரிசையாக நடைபெற்றது. குடமுழுக்கு திருப்பணிகள் கடந்த 23ம் தேதி யாக சாலை பூஜைகளுடன் துவங்கியது. இதற்கான 90 யாக சாலைகள் அமைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க எட்டு கால பூஜைகள் கடந்த நான்கு நாட்களாக மலைக்கோயில் வளாகத்தில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை அருள்மிகு தண்டாயுதபாணி உபக்கோயில்காளன இடும்பன் கோயில், பாத விநாயகர், கிரிவல பாதையில் உள்ள ஐந்து மயில்கள் உட்பட 83 கோவில்களுக்கு நேற்று காலை வெகு முயற்சியாக குடமுழுக்கு நடைபெற்றது இதனைத் தொடர்ந்து இன்று காலை இன்று மலைக்கோயில் பிரகாரத்தில் உள்ள ராஜகோபுரம் , தங்க விமானம் ஆகிபவற்றிக்கு தற்பொழுது கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கங்கை, காவிரி உள்ளிட்ட பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கடந்த நான்கு நாட்களாக யாக சாலைகளில் வைக்கப்பட்டு 108 சிவாச்சாரிகள், 108 ஓதுவார்கள் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் கந்தன் அலங்காரம் என முருக கடவுளை தமிழில் பூஜை செய்து யாக சாலையில் இருந்து கலசலங்களில் சிவாச்சாரியார்கள் கொண்டு வந்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் தங்க விமானம் மற்றும் குழுமியிருக்கும் பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் பூ துவப்பட்டது. கலசங்களில் புனித நீர் ஊற்றப்படுவதை மலைக்கோயில் பிராகாரத்தில் குவிந்துள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா சரண கோஷத்துடன் தரிசனம் செய்தனர்
தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரை வந்து மலை கோயில் கிரிவலத்தில் காத்திருக்கும் பக்தர்கள் காணும் வகையில் கிரிவல வீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட இடங்களில் மெகா எல்இடி திரைகள் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. மலைக்கோவில் வளாகத்தில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் கூடுவதை தவிர்க்க குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் யானை பாதை வழியாக மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரண்டு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் பல்வேறு மாவட்டங்களில் 3000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் கலந்து கொள்வதற்காக பழனி அருகே உள்ள புளியம்பட்டி பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் கட்டணம் இன்றி இயக்கப்பட்டது.
விழாவில் ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். கும்பாபிஷேக நிறைவடைந்த உடன் இன்று நண்பகல் 11 மணிக்கு பின்னர் அனைத்து பக்தர்களையும் மலைக்கோவிலில் அனுமதிக்க கோவில் நிர்வாகம் நடக்க எடுத்துள்ளது.
16 ஆண்டுகளுக்குப் பின்பு பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெறுவதால் பழனி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதனை ஒட்டி மதுரையில் இருந்து சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டது. அதேபோல் திருச்சி மதுரை கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் கடந்த இரு தினங்களாக இயக்கப்பட்டு வருகிறது. இதனைதொடர்ந்து இன்று மாலை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.