தஞ்சையில் கொண்டாட்டமாக 52 விநாயகர் சிலைகள் ஆற்றில் விசர்ஜனம்
பல்வேறு பகுதிகளிலிருந்து ஸ்ரீ விஸ்வரூப விநாயகர் விழாக் குழு சார்பில் 35 விநாயகர் சிலைகள் ரயிலடிக்குக் கொண்டு வரப்பட்டன.
தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் 52 சிலைகள் எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டன.
விநாயக சதுர்த்தி விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்படும். பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை 3வது நாள், 5வது நாள் ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகளில் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைத்துவிடுவர்.
அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, தஞ்சாவூரில் பாஜக, இந்து முன்னணி, இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 74 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டன. இவற்றில் 20-க்கும் அதிகமான சிலைகள் புதன்கிழமையும், வியாழக்கிழமையும் கரைக்கப்பட்டன.
இந்நிலையில், மூன்றாம் நாளான நேற்று மாலை விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளிலிருந்து ஸ்ரீ விஸ்வரூப விநாயகர் விழாக் குழு சார்பில் 35 விநாயகர் சிலைகள் ரயிலடிக்குக் கொண்டு வரப்பட்டன.
பின்னர், இந்த அமைப்பு சார்பில் நடைபெற்ற ஊர்வலத்துக்குக் குழு ஒருங்கிணைப்பாளர் வி. விநாயகம் தலைமை வகித்தார். இந்த ஊர்வலத்தை பாஜக தேசியப் பொதுக் குழு உறுப்பினர் எம்.எஸ். ராமலிங்கம் தொடங்கி வைத்தார். தெற்கு மாவட்டத் தலைவர் பி. ஜெய்சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஊர்வலத்துக்கு மாவட்டச் செயலர் குபேந்திரன் தலைமை வகித்தார். இதில், 17 விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன. இச்சிலைகள் காந்திஜி சாலை, பழைய பேருந்து நிலையம், தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி, கொடிமரத்து மூலை, கரந்தை வழியாகச் சென்று வடவாற்றில் கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையொட்டி, போலீசார் அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் ஆங்காங்கே உள்ள ஆறுகளிலும், கடலிலும் கரைக்கப்பட்டன.
இதேபோல் வல்லம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி 13 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் நேற்று மாலை ஊர்வலமாக எடுத்துச் சென்று புது ஆற்றில் கரைக்கப்பட்டது.
இதற்காக தஞ்சை அருகே வல்லம் வட்டாரத்தில் 13 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த வகையில் திருக்கானூர்பட்டி, குருங்குளம், வல்லம் நகர் பகுதிகள் என்று விநாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. மூன்றாம் நாளான நேற்று அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு ரெட்டிப்பாளையம் கல்லணைக்கால்வாயில் (புதுஆறு) விசர்ஜனம் செய்யப்பட்டது.