Alexei Navalny: புதினை எதிர்த்தா கதை அம்பேல்? ரஷிய எதிர்க்கட்சி தலைவர் மர்ம மரணம் - பகீர் பின்னணி!
புதினை கடுமையாக விமர்சித்து வந்த ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி உயிரிழந்துள்ளார்.
ரஷியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் மர்ம மரணம் அடைவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, ரஷிய அதிபர் புதினை விமர்சிக்கும் தலைவர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் மரணம் அடைந்து வருவது உலகளவில் பரபரப்பை கிளப்பி வருகிறது. சமீபத்தில், புதினுக்கு எதிராக உள்நாட்டில் கிளர்ச்சியை தொடங்கிய, வாக்னர் கூலிப்படையின் தலைவர் எக்னி பிரிகோசின், விமான விபத்தில் மர்மமான முறையில் இறந்தார்.
ரஷிய எதிர்க்கட்சி தலைவர் மர்ம மரணம்:
அந்த வரிசையில், புதினை கடுமையாக விமர்சித்து வந்த ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி உயிரிழந்துள்ளார். 19 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அலெக்ஸி நவல்னி, ஆர்க்டிக் சிறை காலனியில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் சந்தேகத்திற்குரிய வகையில் மரணம் அடைந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அலெக்ஸி நவல்னி மரணம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள சிறை நிர்வாகம், "நடைபயிற்சி சென்று வந்த நவல்னி, உடனடியாக சுயநினைவை இழந்தார். மருத்துவ ஊழியர்கள் உடனடியாக வந்து ஆம்புலன்ஸை வரவழைத்தனர். அவரை சுயநினைவுக்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவை நேர்மறையான முடிவுகளைத் தரவில்லை. நவல்னியின் மரணத்தை சுகாதார பணியாளர்கள் உறுதி செய்தனர். மரணத்திற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்" என தெரிவித்துள்ளது. இந்த மரணம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளதாக ரஷிய விசாரணை குழு தெரிவித்துள்ளது.
பகீர் கிளப்பும் கொலை முயற்சிகள்:
நவல்னியின் ஊடக செயலாளர் கிரா யர்மிஷ், இதுகுறித்து கூறுகையில், "அவரது மரணம் குறித்து எங்களின் குழுவுக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. நவல்னியின் வக்கீல் இப்போது கார்ப்பிற்கு சென்று கொண்டிருக்கிறார். அங்குதான், சிறை உள்ளது" என்றார். இந்த மரணம் குறித்து ரஷிய அதிபர் புதினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரஷியாவின் முக்கிய எதிர்க்கட்சி தலைவராக உள்ள நவல்னி, புதின் அரசாங்கத்தில் ஊழல் நடப்பதாக தொடர் குற்றச்சாட்டை சுமத்தி வந்தார். இதன் காரணமாக, அவருக்கு பெரும் ஆதரவு பெருகியது. குறிப்பாக, நவல்னியின் யூடியூப் வீடியோக்கள், லட்சக்கணக்கான பார்வைகளை குவித்தது.
ரஷியாவில் போராட்டத்தில் ஈடுபட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதிலும், நவல்னியின் வீடியோவை பார்த்து வெகுண்டெழுந்த மக்கள், தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். 2021 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஜெர்மனியில் இருந்து ரஷியாவுக்குத் திரும்பிய பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை கொல்ல பல முறை முயற்சி நடந்துள்ளது. ஜெர்மனியில் அவரை கொல்ல விஷ ஊசி போட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதிலிருந்துதான் அவர் தப்பியுள்ளார். இதை தொடர்ந்து, பல்வேறு குற்றச்சாட்டுகளில் அவருக்கு 19 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது.