எந்த கார் வாங்கலாம்? Tata Punch EV யா? Tata Nexon EV யா? இரண்டில் பெஸ்ட் எது?
மின்சார கார் வாங்க விரும்புபவர்கள் டாடா பஞ்ச் இவி வாங்கலாமா? அல்லது டாடா நெக்சான் இவி வாங்கலாமா? எதில் சிறந்தது? என்பதை கீழே காணலாம்.

உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தியாவிலும் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களின் பயன்பாட்டில் மின்சார வாகனங்களின் தயாரிப்பு அதிகளவில் காணப்படுகிறது.
இந்தியாவில் மின்சார கார்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழ்வது டாடா ஆகும். டாடாவின் மின்சார கார்களான Tata Punch மற்றும் Tata Nexon உள்ளது. இந்த இரண்டு மின்சார கார்களில் எந்த மின்சார கார் சிறப்பானது என்பதை கீழே காணலாம்.
தோற்றம் எப்படி?
Tata Punch மின்சார கார் வசீகரமான தோற்றம் கொண்டது ஆகும். 3,857 மி.மீட்டர் அகலமும், 1742 மி.மீட்டர் நீளமும், 1633 மி.மீட்டர் உயரமும் கொண்டது ஆகும். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 190 மி.மீட்டர் ஆகும். ஸ்போர்ட்ஸ் ரகம் போல இந்த கார் இருக்கும். நகர்ப்புறங்களில் ஓட்டுவதற்கு ஏற்றாற்போல இந்த கார் வடிவமைக்கப்பட்டிருக்கும். இது ஒரு சிறிய அளவிலான எஸ்யூவி ஆகும்.

Tata Nexon மின்சார காரானது டாடா பஞ்சுடன் ஒப்பிடும்போது அளவில் சற்று பெரியது ஆகும். வசீகரமான அழகிய வளைவுகள், எல்இடி முகப்புகளுடன் இந்த வாகனம் காணப்படும். 3995 மி.மீட்டர் அகலமும், 1802 மி.மீட்டர் நீளமும், 1625 மி.மீட்டர் உயரமும் கொண்டது இந்த நெக்சான் இவி கார். கிரவுண்ட் கிளியரன்ஸ் 190 மி.மீட்டர் ஆகும். அளவிலும், தோற்றத்திலும் டாடா பஞ்சை காட்டிலும் டாடா நெக்ஸான் பெரியதும், வசீகரமும் கூட ஆகும்.
மைலேஜ் எப்படி?
மின்சார கார்களைப் பொறுத்தமட்டில் மைலேஜ் என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில் டாடா பஞ்ச் மின்சார காரில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 365 கி.மீட்டர் வரை செல்லலாம். இதில் சார்ஜ் செய்ய 56 நிமிடங்கள் தேவைப்படுகிறது. 0-வில் இருந்து 100 கி.மீட்டர் வேகத்தை 9.5 நொடிகளில் எட்டும் ஆற்றல் கொண்டது.
டாடா பஞ்ச் காருடன் ஒப்பிடும்போது அதிகளவு மைலேஜ் தரும் மின்சார காராக டாடா நெக்சான் இவி உள்ளது. ஏனென்றால் இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 489 கி.மீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது ஆகும். மேலும், டாடா பஞ்ச்சை காட்டிலும் வேகமாக சார்ஜ் ஏறும் ஆற்றல் கொண்டது. இது முழு சார்ஜை அடைய 40 நிமிடங்கள் மட்டுமே ஆகும். மேலும், 0-வில் இருந்து 100 கி.மீட்டர் வேகத்தை 8.9 நொடிகளில் எட்டிவிடும்.
பேட்டரி எப்படி?

டாடா Punch.ev-யைப் பொறுத்தமட்டில் இதில் 35 கிலோ வாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 365 கி.மீட்டர் வரை தடையின்றி செல்ல துணை நிற்கிறது. 90 கிலோவாட் பவர் உள்ளது. 190 என்எம் டார்க் இழுதிறன் உள்ளது.
டாடா நெக்ஸானில் 30 கிலோவாட் பேட்டரி கொண்ட வாகனமும் உள்ளது. 45 கிலோவாட் கொண்ட பேட்டரி கொண்ட வாகனமும் உள்ளது. இதுவே 489 கிலோ மீட்டர் மைலேஜ் தருகிறது. 30 கிலோவாட் பேட்டரி 325 கிலோ மீட்டர் மைலேஜ் தருகிறது.
பாதுகாப்பு எப்படி?
Tata Punch மின்சார காரில் 360 டிகிரி கேமரா உள்ளது. மேலும், ப்ளைண்ட் ஸ்பாட் என ஓட்டுநர் பார்க்க இயலாத இடங்களை கண்காணிக்கும் வசதியும் உள்ளது. இது ஓட்டுனருக்கு ஏதேனும் இடையூறாக இருந்தால் எச்சரிக்கும் வசதியை கொண்டுள்ளது. எலக்ட்ரானிக் பார்க்கிங் ப்ரேக் வசதி உள்ளது. இது பார்க்கிங் செய்யும் சிரமத்தை போக்குகிறது. அவசர காலத்தில் உதவும் வகையில் எஸ்ஓஸ் அழைப்பு முறை இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் மொத்தம் 6 ஏர்பேக்குகள் பயணிகளின் பாதுகாப்பிற்காக உள்ளது. மேலும், மலைப்பகுதிகளில் இந்த காரை ஓட்டுவதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
Tata Nexon மின்சார காரும் டாடா பஞ்சுடன் ஒப்பிடும்போது எந்த வகையிலும் பாதுகாப்பு அம்சத்தில் குறைவில்லாத கார் ஆகும். பாதுகாப்பு அம்சத்தில் 5 ஸ்டார் ரேட்டிங் கொண்டது. பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் 32க்கு 29.86ம், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 44.95ம் பெற்றுள்ளது. டயரின் அழுத்தத்தை கண்காணிக்கும் Tyre Pressure Monitoring வசதி உள்ளது. 360 டிகிரி கண்காணிப்பு கேமரா உள்ளது. ப்ளைண்ட் ஸ்பாட் வியூ மானிடர் வசதி உள்ளது.
விலை எப்படி?
டாடா பஞ்ச் மின்சார காரின் தொடக்க விலை ரூபாய் 9.99 லட்சம் ஆகும். அதிகபட்சமாக டாடா பஞ்ச் Empowered + LR ACFC மாடல் ரூபாய் 14.14 லட்சம் ( எக்ஸ் ஷோரூம்) வரை விற்கப்படுகிறது. டாடா நெக்ஸான் மின்சார காரின் தொடக்க விலை ரூபாய் 12.49 லட்சம் ஆகும். அதிகபட்சமாக இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 17 லட்சம் ( எக்ஸ் ஷோரூம்) வரை விற்கப்படுகிறது.
இரண்டு வாகனத்திலும் டேஷ்போர்ட் கூகுள் மேப், பாடல்கள், இணைய வசதி, செல்போன் சார்ஜ் வசதியுடன் உள்ளது. நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசலில் ஓட்டுவதற்கு டாடா பஞ்ச் மின்சார கார் ஏற்றது ஆகும். டாடா நெக்ஸான் மின்சார கார் ப்ரிமீயம் லுக்கில் நெடுஞ்சாலையில் நீண்டதூரம் செல்வதற்கு ஏற்ற வாகனம் ஆகும்.





















