Right To Abortion: நிலைநாட்டப்படுமா பெண்கள் கருகலைப்பு உரிமை? - பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்!
பெண்களின் கருகலைப்பு தொடர்பான மசோதா நேற்று பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
பெண்களின் கருகலைப்பு உரிமை தொடர்பான மசோதா நேற்று பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது நாடாளுமன்ற கீழ்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைகள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பெண்கள் கருகலைப்பு தொடர்பான உரிமைகள் வழங்கப்படும் என உறுதியளித்தார். பிரான்ஸ் அரசாங்கம் அரசியலமைப்பின் 34 வது பிரிவு "கருக்கலைப்புக்கு பெண்களின் சுதந்திரத்தைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகளை சட்டம் தீர்மானிக்கும்” என்று திருத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.
அரசியலமைப்புத் திருத்தமானது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, வாக்கெடுப்பு அல்லது நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்வில் ஐந்தில் மூன்று பங்கு பெரும்பான்மையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இதில் பிரான்ஸ் அரசாங்கம் இரண்டாவது முறையை இலக்காகக் கொண்டுள்ளது. இருப்பினும் செனட்டில் இதற்கான ஆதரவு தேசிய சட்டமன்றத்தை விட குறைவாகவே உள்ளது என கூறப்படுகிறது.
பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரான்ஸின் முக்கிய அரசியல் கட்சிகள் எதுவும் கருக்கலைப்புக்கான உரிமையை கேள்விக்குள்ளாக்கவில்லை என்றும் பாராளுமன்றத்தின் கீழ் சபையான தேசிய சட்டமன்றத்தில் பெரும்பான்மையான பிரதிநிதிகள் இந்த திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸில் கருக்கலைப்பு 1975 சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டது ஆகும், ஆனால் கருக்கலைப்பு உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பில் சட்டங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் பெண்களின் கருகலைப்பு உரிமைகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக கருக்கலைப்பு உரிமைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பிரான்ஸ் அரசாங்கம் இந்த மசோதாவை தாக்கல் செய்த போது குறிப்பிட்டிருந்தது. மேலும், பிரான்ஸ் மட்டுமல்லாமல் ஐரோப்பா நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் இந்த கோரிக்கை தொடர்பான கருத்துக்கள் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலந்தில், ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட்ட கருக்கலைப்புச் சட்டத்தின் சர்ச்சைக்குரிய சூழலில், கடந்த ஆண்டு பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். டவுன் சிண்ட்ரோம் உட்பட கடுமையான கரு குறைபாடுகள் உள்ள சந்தர்ப்பங்களில் பெண்கள் இனி கருகலைக்க முடியாது என்று போலந்து அரசியலமைப்பு நீதிமன்றம் 2020 இல் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
இப்படி உலகம் முழுவதும் கருகலைப்பு தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் இருந்து வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கீழ்சபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த மசோதா செனட் சபைக்கு அனுப்பப்படும். அங்கு பெரும்பான்மை பெற்றால் இது சட்டமாக நிறைவேற்றப்படும்.