(Source: ECI/ABP News/ABP Majha)
Afghanistan Ambassador: இந்தியாவிற்கு புதிய தூதரை நியமித்துள்ளதா ஆப்கானிஸ்தான்..? உண்மை நிலவரம் என்ன?
தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்கும் முயற்சியில் சில நாடுகள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 2021-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை கவிழ்த்து தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். அவர்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் அந்த நாட்டில் ஏராளமான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க ஆதரவு அரசு அமைவதற்கு முன்பு தலிபான்கள் ஆட்சி செய்தபோது இருந்த கடும் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருவது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியது. இதன் காரணமாக, தலிபான் அரசாங்கத்திற்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அங்கீகாரம் வழங்காமல் உள்ளது.
தலிபான் ஆட்சியை அங்கீகரிக்காத உலக நாடுகள்:
ஆனால், தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்கும் முயற்சியில் சில நாடுகள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், பாகிஸ்தான், சீனா, ரஷியா ஆகிய நாடுகள், தலிபான் அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் இந்தியா, கவனமான செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவுக்கு புதிய தூதரை தலிபான் அரசு நியமித்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. தூதராக நியமிக்கப்பட்டவர் என சொல்லப்படுபவர் தூதரக அதிகாரிகளுக்கு எதிராக தவறான தகவல்கள் மற்றும் ஆதாரமற்ற பிரச்சாரம் மேற்கொள்வதாக இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவுக்கு புதிய தூதரா?
இதுகுறித்து இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் ஃபரித் மம்ஜாய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தலிபான்களின் உத்தரவின் பேரில் புதிய தூதராக பொறுப்பேற்றுக் கொண்டதாகக் கூறும் ஒரு நபரின் கூற்றுக்களை ஆப்கானிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் தூதரகம் திட்டவட்டமாக நிராகரிக்கிறது.
ஆப்கானிஸ்தான் மக்களின் நலன்களை ஆதரிப்பதற்காக இந்திய அரசாங்கத்தின் நிலையான நிலைப்பாட்டை தூதரகம் பாராட்டுகிறது. அதே நேரத்தில் காபூலில் உள்ள தலிபான் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை. இதையே உலகெங்கிலும் உள்ள ஜனநாயக அரசாங்கங்களும் கடைபிடிக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்கள் அதன் தற்போதைய வர்த்தக ஆலோசகரான காதர் ஷாவை இந்தியாவுக்கான தூதராக நியமித்துள்ளதாக பல ஊடகங்களில் செய்தி வெளியானது. தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் அந்த நாட்டில் ஏராளமான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
மோசமான கட்டுப்பாடுகள்:
விதிக்கப்பட்டு வரும் பிற்போக்கான விதிகள் காரணமாக அந்த நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, பெண்களுக்கு எதிராக கொண்டு வரப்படும் மோசமான கட்டுப்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து உள்ளுர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களில் பெண்களை பணியில் அமர்த்துவதை நிறுத்த வேண்டும் என தலிபான் அரசு கட்டுப்பாடு விதித்தது. இது நிலைமையை மேலும் மோசமாக்கியது.