விழுப்புரத்தில் உயிரிழந்த சமையல் மாஸ்டர் உடல்; கலெக்டர் முன்னிலையில் 2வது முறையாக புதைப்பு
இரண்டாவது முறையாக உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட ராஜாவின் உடல் நீதிமன்ற உத்தரவுப்படி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஆட்சியர் பழனி முன்னிலையில் இரண்டாவது முறையாக புதைக்கப்பட்டது.
விழுப்புரம்: விழுப்புரத்தில் டாஸ்மாக் பார் சமையல் மாஸ்டர் ராஜா போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் இரண்டாவது முறையாக உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட ராஜாவின் உடல் நீதிமன்ற உத்தரவுப்படி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஆட்சியர் பழனி முன்னிலையில் இரண்டாவது முறையாக புதைக்கபட்டது.
போலீசார் தாக்கியதால் இறந்தார்?
விழுப்புரம் அருகேயுள்ள திருப்பச்சாவடி மேடு பகுதியில் இயங்கும் அரசு மதுபான கடையில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்த விழுப்புரம் பெரிய காலனி பகுதியை சேர்ந்த ராஜா என்பவரை கடந்த ஏப்ரல் 10ம் தேதி விழுப்புரம் தாலுக்கா போலீசார் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று விசாரனை செய்தனர். அதன் பின்னர் மதுபாட்டில் விற்பனை செய்ததாக ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பாரில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்த ராஜா வீட்டிற்கு சென்று தனது மனைவியிடம் போலீசார் தன்னை தாக்கியதாக கூறி மயக்கமடைந்தார்.
மறு பிரேத பரிசோதனை
இதனையடுத்து ராஜாவின் மனைவி அஞ்சு ராஜாவை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது ராஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ராஜாவின் உடலுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு செய்து போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் கணவர் இறப்பிற்கு காவல் துறையினர் தாக்கியதால் தான் இறந்ததாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜாவின் மனைவி மறு உடற்கூறு ஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி 8 நாட்களுக்குள் மறு உடற்கூறு ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின் பேரில் கடந்த 22 ஆம் தேதி ராஜாவின் உடலுக்கு இரண்டாவது முறையாக கே கே சாலையிலுள்ள சுடுகாட்டில் ஆட்சியர் பழனி மற்றும் விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி ராதிகா முன்னிலையில் சென்னை அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர் இரண்டு பேர் மறு உடற்கூறு ஆய்வு செய்தனர்.
உடற்கூறு ஆய்வு முடிந்தும் உடலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென அஞ்சு உயர்நீதிமன்றத்தை நாடியபோது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் பேரில் மறு உடற்க்கூறாய்வு செய்யப்பட்ட ராஜாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்பு விழுப்புரம் நகராட்சி இடுக்காட்டில் மாவட்ட ஆட்சியர் பழனி முன்னிலையில் அடக்க செய்யப்பட்டது.