Maha Shivratri 2025: நாளை மகாசிவராத்திரி! கட்டாயம் கோயிலில் இருக்க வேண்டிய நேரம் என்ன?
Maha Shivratri 2025: மகாசிவராத்திரி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், கட்டாயம் கோயிலில் இருக்க வேண்டிய நேரம் என்ன என்பதை கீழே விரிவாக காணலாம்.

Maha Shivratri 2025: அனைத்திற்கும் ஆதியாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் சிவபெருமான். சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாட்களில் ஒன்றாக கருதப்படுவது மகா சிவராத்திரி. மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தசி திதியில் வரும் சிவராத்திரி மகாசிவராத்திரி ஆகும்.
மகாசிவராத்திரி:
நடப்பாண்டிற்கான மகாசிவராத்திரி பிப்ரவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதன்படி, நாளை மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் மகாசிவராத்திரி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் சிவாலயங்கள் களைகட்டி காணப்படும்.
மகாசிவராத்திரி நன்னாளில் பக்தர்கள் சிவாலயங்களுக்குச் சென்று அங்கு நடக்கும் நான்கு கால பூஜையிலும் பங்கேற்பது வழக்கம் ஆகும். இந்தாண்டு மகாசிவராத்திரி பொதுமக்களின் வேலை நாளான புதன்கிழமை இரவு வந்திருப்பதால் பலராலும் இரவு கண்விழிக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கட்டாயம் பங்கேற்க வேண்டிய பூஜை எது?
இதனால், மகா சிவராத்திரி நாளில் நடக்கும் நான்கு கால பூஜையில் கட்டாயம் பக்தர்கள் பங்கேற்க வேண்டிய 3ம் மற்றும் நான்காம் கால பூஜையில் பங்கேற்கலாம். மகாசிவராத்திரியை முன்னிட்டு நாளை மாலை 6 மணி தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நான்கு கால பூஜை சிவாலயங்களில் தொடர்ந்து நடக்கும்.
நான்கு கால பூஜையிலும் பங்கேற்க இயலாத பக்தர்கள் 3வது மற்றும் நான்காம் கால பூஜையில் பங்கேற்கலாம். 3ம் கால பூஜை சரியாக நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும். நான்காம் கால பூஜை அதிகாலை 3 மணிக்குத் தொடங்குகிறது. இந்த இரண்டு பூஜைகளில் பங்கேற்பது பக்தர்களுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
களைகட்டும் சிவாலயங்கள்:
இந்த பூஜைகளில் பங்கேற்கும் பக்தர்கள் நன்றாக குளித்து தூய்மையாக கோயிலுக்குச் செல்ல வேண்டும். அங்கு நடக்கும் பூஜையில் சிவபெருமானை மனதார வணங்கி சிவ நாமங்களைக் கூறி பூஜையில் பங்கேற்க வேண்டும்.
மகாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சிவாலயங்களான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களும் சிவராத்திரிக்காக களைகட்டி காணப்படுகிறது. இந்த கோயில் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களும் பக்தர்கள் அதிகளவு காணப்படுவார்கள் என்பதால் பக்தர்களின் வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

