காங்கிரஸை கை கழுவுகிறாரா சசி தரூர்? பாஜக அமைச்சருடன் போட்டோ.. யாரும் எதிர்பார்க்கல!
கடந்த சில ஆண்டுகளாகவே, காங்கிரஸ் தலைமை மீது சசி தரூர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், அக்கட்சியில் இருந்து வெளியேறி வேறொரு கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர், அக்கட்சியில் இருந்து வெளியேறி வேறொரு கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயலுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் சசி தரூர் பகிர்ந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைமை உடன் மோதல்?
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த பிரபல காங்கிரஸ் தலைவர் சசி தரூர், ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியை பாராட்டி சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே அவர் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதை அவர் பல முறை வெளிப்படுத்தி இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் பிரதான எதிரியான கம்யூனிஸ்ட் கட்சியை அவர் பாராட்டியதாகக் கூறப்படுகிறது.
சசி தரூரின் அடுத்த மூவ் என்ன?
இந்த விவகாரத்தில், சசி தரூர் மீது கேரள காங்கிரஸ் கடும் விமர்சனங்களை மேற்கொண்டது. இடது ஜனநாயக முன்னணி அரசின் தோல்விகளை காங்கிரஸ் கட்சி விமர்சிக்கும் போது, அதை உள்ளிருந்து கொண்டே பலவீனப்படுத்துவது தற்கொலைக்குச் சமம் என கேரள காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான வீக்சணம் சாடியிருந்தது.
இந்த நிலையில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய வர்த்தகத்துறை அமைச்சருமான பியூஷ் கோயல், பிரிட்டன் வர்த்தகத்துறை அமைச்சர் ஜோனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் சசி தரூர் பகிர்ந்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
முன்னதாக, காங்கிரஸ் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த சசி தரூர், "கட்சி என்னை விரும்பினால், கட்சிக்காக நான் இருப்பேன். இல்லையென்றால், எனக்குச் செய்ய என் சொந்த வேலைகள் உள்ளன. நேரத்தைச் செலவிட எனக்கு வேறு வழியில்லை என்று நீங்கள் நினைக்கக்கூடாது. எனக்கு வேறு வழிகள் உள்ளன. எனக்கு எனது புத்தகங்கள், உரைகள், உலகம் முழுவதிலுமிருந்து பேச்சுக்களுக்கான அழைப்புகள் உள்ளன" என்றார்.




















