வெளுத்துவாங்கும் கோடை வெயில்....விழுப்புரத்தில் பழங்களின் விலை உயர்வு... எவ்வளவு தெரியுமா ?
தற்போது ஒவ்வொரு பழங்களின் விலையும் கிலோவிற்கு ரூ.10 முதல் ரூ.30 வரை உயர்ந்துள்ளது. பழங்களின் விலை உயர்ந்து காணப்பட்டாலும் அதன் தேவையறிந்து பொதுமக்கள் பலரும் வாங்கிச்செல்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தினால் பழங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் எப்போதுமே பொதுமக்களை நேரடியாக பாதிக்கக்கூடியது. தற்போது கடந்த சில மாதங்களாகவே காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது. இவ்வாறு மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய காய்கறிகள், மளிகை பொருட்களின் விலை ஒவ்வொரு நாளும் விண்ணை முட்டுமளவிற்கு உயர்ந்து கொண்டே செல்வது ஏழை, எளிய, நடுத்தர மக்களை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் பொதுமக்கள் திக்குமுக்காடி வருகின்றனர்.
பழங்களின் விலை உயர்வு
இந்நிலையில் காய்கறிகள், மளிகைப்பொருட்களின் விலையேற்றத்தை தொடர்ந்து பழங்களின் விலையும் தற்போது கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு, வெப்பம் அதிகரிப்பால் காய்கறி மற்றும் பழங்களின் விளைச்சல் குறைந்துள்ளது.
விளைச்சல் குறைவு
விழுப்புரம் சந்தைக்கு பிற வெளிமாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வரக்கூடிய பழங்களின் வரத்து நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. இதன் காரணமாகவே பழங்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தித்திக்கும் இனிப்பு கொண்ட பழங்களின் விலை உயர்வு என்பது ஏழை, எளிய மக்களுக்கு கசப்பாகவே அமைந்துள்ளது. கோடை வெயில் சுட்டெரித்து வருகிற நிலையில் விளைச்சல் குறைவு காரணமாக பழங்களின் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலையும் உயர்ந்து காணப்படுகிறது.
கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது ஒவ்வொரு பழங்களின் விலையும் ரூ.10 முதல் ரூ.30 வரை உயர்ந்துள்ளது. விழுப்புரத்துக்கு ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு, சாத்துக்குடி, அத்திப்பழம் உள்ளிட்ட பழங்கள் பெங்களூருவில் இருந்தும், மாம்பழங்கள் சேலம், வேலூர், பண்ருட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்தும் அன்னாசிப்பழம் கேரளாவில் இருந்தும், கிர்னி, திராட்சை, தர்பூசணி, வாழை போன்ற பழங்கள் உள்ளூர் பகுதிகளில் இருந்தும் வரத்து வருகிறது. இவற்றில் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய பழங்கள், விளைச்சல் பாதிப்பு காரணமாக வரத்து குறைந்து காணப்படுகிறது.
விலை விவரம்
இதன் காரணமாக கடந்த வாரம் ஒரு கிலோ ஆப்பிள் ரூ.160 முதல் ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் மாம்பழங்களில் ஒட்டுரகம் கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.80-க்கும், பங்கனப்பள்ளி கிலோ ரூ.120-க்கு விற்ற நிலையில் தற்போது ரூ.140-க்கும், ரூ.70-க்கு விற்ற செந்தூரா ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் கடந்த வாரம் கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்ட ஆரஞ்சு தற்போது ரூ.30 அதிகரித்து ரூ.160 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுபோல் மாதுளை கிலோ ரூ.160-க்கு விற்ற நிலையில் ரூ.20 அதிகரித்து ரூ.180 ஆகவும், ரூ.80-க்கு விற்ற ஒரு டிராகன் பழம் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர கிலோ அளவில் ரூ.80-க்கு விற்ற சாத்துக்குடி தற்போது ரூ.100-க்கும், ரூ.80-க்கு விற்ற திராட்சை ரூ.100-க்கும், ரூ.30-க்கு விற்ற கிர்னி ரூ.40-க்கும், ரூ.10 முதல் ரூ.15-க்கு விற்ற தர்பூசணி ரூ.20-க்கும், வாழைப்பழங்களில் ஒரு டஜன் கற்பூரவள்ளி ரகம் ரூ.50-க்கு விற்ற நிலையில் ரூ.60-க்கும், ரூ.40-க்கு விற்ற பூம்பழம் ரூ.50-க்கும், ரூ.50-க்கு விற்ற மோரிஸ் ரூ.60-க்கும், ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு செவ்வாழைப்பழம் ரூ.15-க்கும், ரூ.80-க்கு விற்ற ஒரு கிலோ அன்னாசிப்பழம் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வியாபாரத்தில் பாதிப்பு இல்லை
காய்கறிகள், மளிகைப்பொருட்களின் விலையேற்றத்தை தொடர்ந்து பழங்களின் விலை உயர்வு பொதுமக்களுக்கு மேலும் எரிச்சலை தந்தாலும் உடல் ஆரோக்கியத்திற்கு பழங்கள் பெரும் பங்கு வகிப்பதால் அதன் விலை உயர்வை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பலரும் வாங்கிச்சென்ற வண்ணம் உள்ளனர். இதுகுறித்து மொத்த பழ வியாபாரி ஒருவர் கூறுகையில், கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் குளிர்ச்சியை தரக்கூடிய பழங்களின் விலை உயர்ந்துள்ளது.
அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரக்கூடிய பழங்களின் வரத்து குறைந்துள்ளதால் கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது ஒவ்வொரு பழங்களின் விலையும் ரூ.10 முதல் ரூ.30 வரை உயர்ந்துள்ளது. பழங்களின் விலை உயர்ந்து காணப்பட்டாலும் அதன் தேவையறிந்து பொதுமக்கள் பலரும் வாங்கிச்செல்கின்றனர். இதன் விலை உயர்வால் எங்கள் வியாபாரத்தில் பெரியளவில் எந்த பாதிப்பும் இல்லை என்றார்.