Villupuram : 40க்கு 40 தொகுதிகளை கைப்பற்ற ஒன்று கூடி பாடுபடுவோம் - அண்ணா படத்திற்கு முன் சபதம் ஏற்ற திமுகவினர்
40க்கு 40 தொகுதிகளை கைப்பற்ற ஒன்று கூடி பாடுபடுவோம் - அண்ணா படத்திற்கு முன் சபதம் ஏற்ற திமுகவினர்
பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாளையொட்டி அவரின் நினைவிடம் வரை பேரணியாகச் சென்ற தி.மு.கவினர், அவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அண்ணா நினைவுநாளையொட்டி திமுகவினர் அனைவரும் அமைதிப்பேரணி நடத்தி அறிஞர் அண்ணாவுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
திமுக அமைதிப்பேரணி
அதன்படி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் சென்னையில் திமுக அமைதிப்பேரணி நடைபெற்றது. இந்த அமைதிப்பேரணியில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு, திமுக பொருளாளர் டி. ஆர். பாலு, கனிமொழி எம்.பி., உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். திருவல்லிக்கேணி - வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து அமைதிப்பேரணி புறப்பட்டு, அண்ணா நினைவிடத்தில் முடிந்தது. அண்ணா நினைவுநாளையொட்டி அவரின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நினைவிடம் வரை நடைபெற்ற அமைதிப்பேரணிக்குப் பிறகு துரைமுருகன் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
40க்கு 40 தொகுதிகளை கைப்பற்ற ஒன்று கூடி பாடுபடுவோம்
இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, திண்டிவனம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக நிர்வாகிகள் அமைதிப்பேரணியாக சென்று அறிஞர் அண்ணா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் மரக்காணம் மத்திய ஒன்றிய திமுகவினர் சார்பில் சிறுவாடி கிராமத்தில் அமைதி ஊர்வலமாக சென்று அறிஞர் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது படத்திற்கு முன்பாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளை கைப்பற்ற ஒன்று கூடி பாடுபடுவோம் என சபதம் ஏற்றனர்.
தமிழ்நாட்டின் தலைமகன் - மாநில உரிமைகளின் போர்க்குரல் - தமிழர்களை காக்க கழகமெனும் பேராயுதம் தந்த நம் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு, கழக பொதுச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் சக அமைச்சர்கள் - கழகப் பொருளாளர் - துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட… pic.twitter.com/7pYcXaYf9v
— Udhay (@Udhaystalin) February 3, 2024