CJI BR Gavai: “ஓய்வு பெற்ற உடன் நிச்சயம் அப்படி செய்ய மாட்டேன்“ - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓபன் Talk
நீதிபதிகள் ஓய்வுபெற்ற பின் அப்படி செய்தால், நீதித்துறையின் மீது நம்பிக்கை குறையும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் தெரிவித்துள்ளார். அப்படி என்ன செய்யக் கூடாது என்று சொல்கிறார் தெரியுமா?

ஓய்வுபெறும் நீதிபதிகள் அரசு பதவிகளை ஏற்பது குறித்து, தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், தான் அவ்வாறு செய்ய மாட்டேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்றபின் அரசு பதவிகளை ஏற்ற நீதிபதிகள்
கடந்த 2019-ல், அயோத்தி வழக்கின் தீர்ப்பை, அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட், ஓய்வுபெற்ற நீதிபதிகள் அசோக் பூஷன், அப்துல் நசீர் ஆகியோர் வழங்கினர். அதன் பின், அவர்கள் அரசு பதவிகளில் அமர்த்தப்பட்டனர்.
அதில், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற்ற பின், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இவர், 2011 முதல் 2012 வரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்.
மற்றொரு முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான எஸ்.ஏ. பாப்டே, தனது ஓய்வுக்குப் பின் மகாராஷ்டிரா தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தராக ஆனார். இவர், 2019 முதல் 2021 வரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியில் இருந்தார்.
முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், 2022 முதல் 2024 வரை அப்பதவியில் இருந்தார். இவர் தனது ஓய்வுக்குப் பின், டெல்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2016 முதல் 2021 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த அசோக் பூஷன், தனது ஓய்வுக்குப் பின் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக பொறுப்பு வகிக்கிறார்.
மற்றொரு உச்சநீதிமன்ற நீதிபதியான அப்துல் நசீர், தனது ஓய்வுக்குப்பின் தற்போது ஆந்திர பிரதேசத்தின் ஆளுநராக உள்ளார். இவர், கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2023 ஜனவரி மாதம் வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற அவர், 2023 பிப்ரவரி மாதமே ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2017-ல் சர்ச்சைக்குரிய முத்தலாக் வழக்கு விசாரணையின் நீதிபதிகள் அமர்வில் இருந்த ஒரே இஸ்லாமிய நீதிபதி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கூறப்பட்ட அனைத்து நீதிபதிகளுமே, அயோத்தி வழக்கின் தீர்ப்பை வழங்கி 5 நீதிபதிகளாவர். இவர்கள், ஓய்வுக்குப் பின் அரசு பதவிகளை ஏற்றுள்ளனர். அரசுக்கு சாதகமான தீர்ப்புகளை வழங்கும் நீதிபதிகளுக்கு அரசு பதவிகள் வழங்கப்படுவதாக ஒரு சர்ச்சையும் உள்ளது.
‘அரசு பதவி‘ - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் கருத்து
இந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள பிஆர் கவாய், நீதிபதிகள் ஓய்வுக்குப் பின் அரசு பதவிகளை ஏற்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். நீதிபதிகள் ஓய்வு பெற்ற உடன் அரசுப் பதவிகளை ஏற்றுக்கொள்வது, தேல்தலில் போட்டியிடுவது போன்ற செயல்கள், மக்களுக்கு நீதித்துறையின் மேல் உள்ள நம்பிக்கையை குறைக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், தான் ஓய்வு பெற்ற பின், ஒரு போதும் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது அவரது நேர்மையை வெளிப்படுத்துவதாக மக்கள் கருதுகின்றனர். அதோடு, அவர் கூறுவதுபோல், மக்கள் கடைசியாக நியாயம் கிடைக்கும் என்று நம்பும் நீதிமன்றங்களின் நீதிபதிகள், ஓய்வுக்குப் பின் அரசு பதவிகளை ஏற்றால், அது எதற்காக வழங்கப்பட்டது என்ற சந்தேகம் எழும். அதனால், பிஆர் கவாயின் கருத்து வரவேற்பை பெற்றுள்ளது.





















