விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு...!
விழுப்புரம் : சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது
- விழுப்புரம் : சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது
தமிழ்நாடு மதுபான சில்லறை வணிக விதிகளின்படி சுதந்திர தினத்தன்று அரசு டாஸ்மாக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும் என்று நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே சுதந்திர தினமான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார். எனவே நாளை மறுநாள் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள் இயங்காது என தெரிவிக்கப்படுகிறது.
- திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது
விழுப்புரம்: திண்டிவனம் அருகே திருவக்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மன் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் மகாதீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் கோவிலின் மேல் பிரகாரத்தில் அமைந்துள்ள பீடத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- விழுப்புரம் மாவட்டத்தில் 75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழாவை
விழுப்புரம் மாவட்டத்தில் 75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழாவை முன்னிட்டு வீடுகள்தோறும் தேசிய கொடி ஏற்றிடும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட தேசிய கொடி விற்பனை தொடக்க நிகழ்ச்சி நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கி தேசிய கொடி விற்பனையை தொடங்கி வைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வழங்கி பேசுகையில், இந்திய திருநாடு சுதந்திரம் பெற்று 75-வது ஆண்டு சுதந்திர தின அமுதப்பெருவிழாவாக நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படஉள்ளது. அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் அதாவது அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்துப்பகுதிகளிலும் உள்ள ஒரு வீடு கூடாத விடுபடாத வகையில் அனைத்து வீடுகளிலும் இன்று (சனிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வரை 3 நாட்களுக்கு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும். இதற்காக பொதுமக்கள், தேசிய கொடியை எளிதாக பெற்றிடும் வகையில் தபால் நிலையம், வணிக நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஆகிய இடங்களில் ஒரு தேசியக்கொடி ரூ.21-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் 4,40,530 வீடுகளுக்கும் கொடிகள் வழங்க தயாராக உள்ளன. அதேபோல் நகராட்சி, பேரூராட்சியிலும் தேசிய கொடிகள் தயாராக உள்ளது என்றார்.
- செஞ்சி அருகே மர்மவிலங்கு கடித்துக் குதறியதில் 7 ஆடுகள் உயிரழப்பு
விழுப்புரம் செஞ்சி அருகே உள்ள வீரணாமூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தசாமி, வண்டிக்காரன். இவர்கள் ஆடுகள் வளர்த்து வருகிறார்கள். நேற்று முன்தினம் மாலை இவர்கள் இருவரும் வீட்டின் பின்புற வயல்வெளி பகுதியில் உள்ள ஆட்டுப்பட்டிகளில் தங்களுக்கு சொந்தமான ஆடுகளை அடைத்து வைத்திருந்தனர். நேற்று காலை 2 பட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த 7 ஆடுகள் ரத்த காயங்களுடன் செத்துக்கிடந்தன. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும் இதுபற்றி செஞ்சி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனக்காப்பாளர்கள் வெங்கடேசன், ராஜாராம், வனக்காவலர் ராஜேந்திரன் மற்றும் கால்நடை மருத்துவர் சபரிமலைநாதன் ஆகியோர் நேரில் சென்று செத்துக்கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர். அப்போது நள்ளிரவில் ஆட்டுப்பட்டிகளுக்குள் புகுந்த மர்மவிலங்கு கோவிந்தசாமிக்கு சொந்தமான 4 ஆடுகளையும், வண்டிக்காரனுக்கு சொந்தமான 3 ஆடுகளையும் கடித்துக் குதறியதில் செத்துக்கிடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆடுகள் உடற்கூராய்வு செய்து புதைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்தும் வனத்துறையினர். விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்