திண்டிவனத்தில் ROAD SHOW... முதலமைச்சர் வருகையை எதிர்பார்க்கும் மக்கள்..விழா கோலத்தில் விழுப்புரம்
திண்டிவனம் நகரில் மேம்பாலம் வழியாக தனியார் திருமண மண்டபம் வரை நடந்தே சென்று (ரோடு ஷோ) பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.
![திண்டிவனத்தில் ROAD SHOW... முதலமைச்சர் வருகையை எதிர்பார்க்கும் மக்கள்..விழா கோலத்தில் விழுப்புரம் Chief Minister Stalin is scheduled to visit Villuppuram district on a Two day tour tnn திண்டிவனத்தில் ROAD SHOW... முதலமைச்சர் வருகையை எதிர்பார்க்கும் மக்கள்..விழா கோலத்தில் விழுப்புரம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/21/8b6c12a70c74b64424343ebfa8cdc7581732203536154113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அவர் ஏற்கனவே அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் கள ஆய்வை முடித்து உள்ளார். இதனை தொடர்ந்து 2 நாள் சுற்றுப் பயணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். இதற்காக அவர், வருகிற 28-ந் தேதி (வியாழக் கிழமை) மாலை சென்னையில் இருந்து விழுப்புரத்துக்கு காரில் வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான ஓங்கூர் சுங்கச்சாவடி அருகில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். இந்த வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் அவர், அங்கிருந்து புறப்பட்டு திண்டிவனம் நகரில் மேம்பாலம் வழியாக தனியார் திருமண மண்டபம் வரை நடந்தே சென்று (ரோடு ஷோ) பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.
அதன் பின்னர், அந்த மண்டபத்தில் நடைபெறும் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி சிறப்புரையாற்றுகிறார். பின்னர் திண்டிவனம் அருகே உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் நிறுவனத்தின் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார். இந்நிகழ்வை முடித்துக் கொண்டு அங்கிருந்து தீவனூர், கூட்டேரிப்பட்டு வழியாக விழுப்புரம் வருகைதரும் அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்டவளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் இரவு தங்குகிறார்.
இதனை தொடர்ந்து, மறுநாள் 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை விழுப்புரம் அருகே ஏனாதிமங்கலத்தில் உள்ள தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.86 கோடியே 25 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டை விவசயிகள் பயன்பாடிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
அதன் பிறகு விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் ரூ.4 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் நினைவு அரங்கம் மற்றும் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர்நீத்த 21 சமூகநீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் ரூ.5 கோடியே 70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.
தொடர்ந்து, அதன் அருகில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு துறைகள் சார்பாக ஏழை, எளிய மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இவ்விழாவை முடித்துக்கொண்டு அன்று மதியமே அவர், சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
முதலமைச்சர் வருகையையொட்டி, அவர் வருகை தரும் வழித்தடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு வசதிகள், மருத்துவ சேவை வசதி, மிக முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வசதிகள், திறப்பு விழா செய்யப்பட உள்ள பணிகளின் திட்ட விவரங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ள பயனாளிகளின் விவரம், தமிழ்நாடு அரசின் சாதனை விவரங்கள், விழா மேடை அமைக்கும் பணிகள் உள்ளிட்டவைகளில் அந்தந்த துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 28-ந் தேதி இரவு கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்க உள்ளதால், சுற்றுலா மாளிகை மட்டுமின்றி பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலகங்களையும் சுத்தம் செய்து வர்ணம் தீட்டி புதுப்பிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)