திருச்சி பூம்புகார் நிறுவனத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி தொடக்கம்
திருச்சி சிங்காரத்தோப்பில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் பூம்புகார் விற்பனை நிலையத்தில் பலவித கொலு பொம்மைகள், கொலு செட்டுகள், நவரத்தின கற்களினாலான பொம்மைகள் இடம் பெற்றுள்ளது.
நம் நாட்டில் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும் இந்துக்களும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி. நவராத்திரி, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் பத்து நாட்கள் கோலாகலமாக, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 9 இரவுகள் மற்றும் 10 நாட்கள் என்று கொண்டாடப்படும் நவராத்திரியில், துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்கள் வழிபடப்படுகின்றன. தீமைக்கு எதிரான நன்மை வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் இந்த பண்டிகை அமைந்துள்ளது. நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு இனத்திலும் பல்வேறு விதமாக துர்கா தேவியை வழிபாடுகள் நவராத்திரியில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் திருச்சி சிங்காரத்தோப்பில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல் வருகிற 06.10.2022 வரை (ஞாயிறுக்கிழமைகள் உட்பட) கொலு கண்காட்சி விற்பனை அமைக்கப்பட்டுள்ளது. இதனை வருவாய் கோட்டாட்சியர் கோ.தவச்செல்வம், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் கங்காதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இக்கண்காட்சியின் சிறப்பு அம்சமாக பலவித கொலு பொம்மைகள், கொலு செட்டுகள், கொண்டபள்ளி பொம்மைகள், மரப்பாச்சி பொம்மைகள், காகிதக்கூழ் பொம்மைகள், மண், பளிங்குக்கல், மாக்கல், நவரத்தின கற்களினாலான பொம்மைகள் குறைந்த பட்சமாக ரூ.50 முதல் ரூ.25,000 வரை இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. மேலும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பொம்மை செட்டுகள் விபரம்: மகாபாரதம் எழுதல், கர்ணனின் ஜனனம், சிவா குடும்பம், மணக்குள விநாயகர், உப்பிலியப்பர், ஆதி சங்கரர், நால்வர் செட், பூத கணைகள், பீமா சேனை கர்வம், குபேரன், கிணறு, காதுகுத்து, ஊஞ்சல், கரகாட்டம், கோவர்த்தனகிரி, துலாபாரம், அஷ்ட பைரவர், நவதுர்கா வாகனம், கிராமிய விளையாட்டுகள், வேத மூர்த்திகள், கார்த்திகை தீபம், கிரிக்கெட், பானை கிருஷ்ணன், தசாவதாரம், அஷ்டலட்சுமி, கயிலாய மலை, கார்த்திகை பெண்கள், ஸ்ரீரங்கம், அன்னபூரணி, விநாயகர், மாயா பஜார், சீனிவாச கல்யாணம், மீனாட்சி கல்யாணம், மும்மூர்த்திகள், ராமர் பட்டாபிஷேகம், தாத்தா பாட்டி, பெருமாள் தாயார், ராமர் பாலம், கனகதாரா, முருகர் உபதேசம், கஜேந்திர மோட்சம், மாங்கனி,ஜோதிர்லிங்கம், பரத நாட்டியம், அசோகவனம், கணையாழி, ஆழ்வார், கோபியர் நடனம், விவசாய செட், ஜடாயு மோட்சம், ராமர், அகலிகை சாப விமோட்சம் செட் முதலான பொம்மைகள் வைக்கபட்டுள்ளது.
குறிப்பாக கொல்கத்தா, மணிப்பூர், ராஜஸ்தான், ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட பொம்மைகள், எண்ணற்ற தனி பொம்மைகளும் பலவிதமான மாடல்களில் வண்ணங்களில் இடம் பெற்றுள்ளன. இக்கண்காட்சியில் காட்சிக்கும் விற்பனைக்கும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள அழகிய கொலு பொம்மைகளை திருச்சி மாநகர மக்கள் வாங்கி தங்கள் இல்லத்திற்கு அழகூட்டி, வரும் நவராத்திரி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ பூம்புகார் விற்பனை நிலையம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்