பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16¼ பவுன் நகை, ரூ.1½ லட்சம் கொள்ளை
பெரம்பலூர் மாவட்டத்தில் என்ஜினீயர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 16¼ பவுன் நகை-ரூ.1½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், கவுல்பாளையம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 48). தச்சு தொழிலாளி. இவருக்கு கனகவள்ளி (42) என்ற மனைவியும், பிரவீன்குமார் (28), பிரேம்குமார் (27) என 2 மகன்களும் உள்ளனர். பிரவீன்குமார், பிரேம்குமார் ஆகியோர் என்ஜினீயர்கள் ஆவார்கள். இதில் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பிரவீன்குமார், அங்கு தனது மனைவியுடன் வசித்து வருகிறார். பிரேம்குமாரும் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் ரவிச்சந்திரன், கனகவள்ளியுடன் புதுக்கோட்டையில் உள்ள தனது உறவினரான டாக்டர் சுப்ரமணியத்தின் மகன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றார். அப்போது அருகில் வசிக்கும் அவரது உறவினரான ராஜசேகர்-சாந்தியிடம் மாலையில் வீட்டில் மின் விளக்கை எரியவிடுமாறு ரவிச்சந்திரன் கூறியுள்ளார். இதன்படி நேற்று முன்தினம் மாலை ராஜசேகரின் மருமகள் மெஹராஜ்பீவி (34), ரவிச்சந்திரனின் வீட்டிற்கு சென்று மின்விளக்குகளை எரியவிட்டு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து இரவு 7.45 மணியளவில் ரவிச்சந்திரனின் வீட்டில் மின் விளக்குகள் அணைந்தன. மேலும் அவரது வீட்டில் சத்தம் கேட்டதால், ராஜசேகரும், மெஹராஜ்பீவியும், அவரது வீட்டிற்கு சென்று ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் உள்ளே சுமார் 20 வயது மதிக்கத்தக்க 2 மர்ம நபர்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்களை வீட்டின் உள்ளே வைத்து கதவை பூட்ட ராஜசேகர் முயற்சி செய்துள்ளார்.
இந்நிலையில் சுதாரித்துக்கொண்ட அந்த நபர்கள், கதவை வலுக்கட்டாயமாக திறந்து கொண்டு வெளியே வந்தனர். அவர்களை பிடிக்க முயன்ற ராஜசேகரை கம்பியால் முதுகில் தாக்கிவிட்டு, கத்தியை காட்டி கொன்று விடுவதாக மிரட்டிவிட்டு தப்பித்து சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து, அந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அந்த வீட்டில் ரவிச்சந்திரன் பீரோவில் வைத்திருந்த தங்கச்சங்கிலிகள், கைச்சங்கிலி, மோதிரங்கள் உள்ளிட்ட 16¼ பவுன் நகைகள், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

