Independence Day 2023 Special : திருச்சி காந்தி மரம்..... பேராசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய மகாத்மா காந்தியடிகள்
திருச்சிக்கும் - காந்திக்கும் நீண்ட உறவு உள்ளது, கல்லூரி வளாகத்தில் இன்றவளவும் பராமரிக்கபட்டு வரும் காந்திமரம் பற்றி விரிவாக பார்ப்போம்.
![Independence Day 2023 Special : திருச்சி காந்தி மரம்..... பேராசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய மகாத்மா காந்தியடிகள் Independence Day 2023 Special : Mahatma Gandhi gave advice to professors in Trichy TNN Independence Day 2023 Special : திருச்சி காந்தி மரம்..... பேராசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய மகாத்மா காந்தியடிகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/14/581436406f5e222fc3ba67426fba56161692034162763184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய தலைவர்களில் பயணத்தை தன் வாழ்வின் ஒரு பகுதியாகக் கொண்டு எல்லா திசைகளிலும் பயணித்தவர் காந்தியடிகள். மனம், நிலம் என்று பிரிந்துகிடந்த இந்தியாவை இணைத்ததில் அவரின் பயணதிற்கு முக்கிய பங்குண்டு. தமிழர்களை அதிகம் நேசித்தார். இப்படி தமிழர்களை நேசித்த காந்தி திருச்சிக்கு ஆறு முறை பயணமாக வந்துள்ளார். தமிழ்நாட்டில் அவர் இருந்த 203 நாள்களில் திருச்சியில் 13 நாள்கள் அவர் தங்கி பயணித்துள்ளார். அண்ணலின் வரவை, தங்கிய நாள்களை இன்றும் திருச்சி தன் நினைவுகளில் பதிந்து வைத்துள்ளது. முதன் முதலில் அடிகளின் காலடி திருச்சியில் பட்டது 1919, செப்டம்பர் 25ல். நூறு ஆண்டுகள் முடிந்துபோயின. நங்கவரம் மிராசுதார் சுப்புராமய்யரின் சிந்தாமணி இல்லத்தில் தங்கினார். தில்லையாடி வள்ளியம்மையின் மன உறுதியை குறிப்பிட்டு, பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசினார். இந்து-முஸ்லிம் ஒற்றுமையை காந்தி அடிகளின் வருகை உறுதி செய்தது. கூட்டத்தில் சில இளைஞர்கள் சின்ன குழப்பம் செய்ய, ஒத்துழையாமையின் வலிமையை பாருங்கள். சிலரின் ஒத்துழையாமை பலரைக் கவனிக்க வைக்கிறது. இதையே அரசுக்கு எதிராக நீங்கள் எல்லோரும் செய்தால், விடுதலை உடனே கிடைக்கும் என்ற காந்தியடிகளின் நகைச்சுவையால் கூட்டமே அதிர்ந்தது.
மேலும், தமிழகத்தில் காந்தியடிகளின் வரலாற்று நிகழ்வுகள் அதிகம் உள்ளது. அதிலும் குறிப்பாக திருச்சி மாவட்டத்திற்கும் காந்திக்கும் உள்ள தொடர்புகள் ஏராளம் என்றே சொல்லலாம். அவற்றில் ஒன்றாகவும், வரலாற்று சாட்சியாகவும் இருப்பது தான் திருச்சியில் உள்ள காந்தி மரம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே 1934 ஆம் ஆண்டு தேசிய கல்லூரியும் ஒரு பள்ளியும் அமைந்திருந்தன. இந்த பள்ளியில் உள்ள மரத்தடியில் தான் மகாத்மா காந்தி பேராசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வந்தார். மகாத்மா காந்தி அமர்ந்த இடம் என்பதால் இன்றைக்கும் அது காந்தி மரம் என்று அழைக்கப்படுகிறது. தற்போது சத்திரம் பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் இந்திரா காந்தி கல்லூரியில் கடந்த 82 ஆண்டுகளுக்கும் மேலாக காந்தியடிகள் அமர்ந்து உரையாற்றிய அந்த மரம் இன்றளவும் பராமரித்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த மரத்தின் பெயர் காந்தியடிகளின் மரம் என்றே அழைக்கப்படுகிறது. இதுகுறித்து கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவிகளிடம் கேட்டபோது காந்தியடிகள் நமது நாட்டிற்காகவும், நாட்டின் விடுதலைக்காகவும் அரும்பாடுபட்டவர் அவரைப் பற்றி புத்தகத்தில் மட்டுமே படித்திருக்கிறோம். அவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு நம் யாருக்கும் கிடைக்காத போதிலும் கூட, அவர் அமர்ந்து உரையாற்றிய இந்த மரம் எங்கள் கல்லூரியில் இருப்பதை மிகவும் பெருமையாகவும், பெருமிதமாகவும் நாங்கள் கருதுகிறோம் என்று தெரிவித்தனர்.
காந்தியடிகள் இங்கு அமர்ந்து பேராசிரியர்களுக்கு அறிவுரை வழங்கியது மட்டுமல்லாமல் வருங்காலத்தில் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும். எப்படி செயல்பட வேண்டும், அவர்களுக்கு ஆசிரியர்களாக இருந்து கற்றுக் கொடுக்க வேண்டிய கடமைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்து உள்ளதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகள் கழித்தும் இன்றளவும் காந்தி மரம் இங்கு சிறப்பு வரலாற்று நிகழ்வாக திகழ்ந்து வருகிறது. இக்கல்லூரிக்கு மிகப்பெரிய ஒரு பெருமை சேர்த்த இடமாக இது கருதப்படுவதால் கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் திருச்சிக்கும் காந்திக்கும் இடையே உள்ள உறவு மிகப் பெரியதாகும். அவர் எடுத்துரைத்த அறிவுரைகளும் அவர் நிலைநாட்டிய செயல்களும் திட்டங்களும் இன்றளவும் வரலாற்றை தலை நிமிர்ந்து பார்க்க வைக்கிறது என்றே கூறலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)