மேலும் அறிய
Advertisement
Accident: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து - 3 பேர் உயிரிழந்த சோகம்
ஆம்னி பஸ் மோதிய வேகத்தில் ஆம்புலன்ஸ் சினிமா பாணியில் அந்தரத்தில் பறந்து சாலையோரம் உள்ள அரிசி ஆலை சுற்றுச்சுவரில் மோதி, மழைநீர் வடிகாலில் விழுந்தது.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4 வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் நாகல் நகரை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 60). நெசவு தொழிலாளியான இவர் தனது குடும்பத்தினர், உறவினர்கள் என மொத்தம் 10 பேருடன் சேர்ந்து தனது குலதெய்வ கோவிலான திருவண்ணாமலை மாவட்டம், படவேடு ரேணுகாம்பாள் கோவிலுக்கு ஒரு வேனில் சென்றார். நேற்று முன்தினம் காலை அவர்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று, சாமி தரிசனம் செய்து விட்டு, பின்னர் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து இரவில் அவர்கள், அதே வேனில் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். வேனை டிரைவரான அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ்(55) ஓட்டினார். நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரில் அந்த வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் விழுப்புரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த டிராக்டரை வேன் டிரைவர் முந்த முயன்றார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டர் சாலையின் இடது பக்கத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேன் சாலையின் மைய தடுப்புச்சுவரில் ஏறி நின்றது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த குப்புசாமி, அவரது மகன் கணேசன் (42), கோபாலின் மனைவி நீலாவதி (65) மற்றும் டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா, சாமிபட்டியை சேர்ந்த சாமிதாஸ் (45), டிராக்டரில் வந்த முதுகளத்தூர் தாலுகா, பொந்தம்புளியை சேர்ந்த சேகர் (40), திலகன் (42) ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது.
இந்நிலையில் ஆம்புலன்ஸ் டிரைவர் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை திருவள்ளுவர் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (45), சாலையில் ஆம்புலன்சை திருப்பி நிறுத்திவிட்டு, விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக, ஸ்டிரெச்சர் மூலம் ஆம்புலன்சில் ஏற்றும் பணியில் ஈடுபட்டார். படுகாயமடைந்த குப்புசாமியை ஆம்புலன்சில் ஏற்றுவதற்கு வேனில் வந்த சுப்ரமணியின் மகளும், ஆடிட்டர் அலுவலகத்தில் பணிபுரிந்தவருமான கவிப்பிரியா (22) உதவி செய்தார். அப்போது அதே சாலையில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி பயணிகளுடன் வேகமாக ஒரு ஆம்னி பஸ் வந்தது. அந்த பஸ்சை டிரைவர் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகா, குப்பக்குறிச்சியை சேர்ந்த சுடலை (42) என்பவர் ஓட்டி வந்தார். அந்த ஆம்னி பஸ் திடீரென சாலையின் மைய தடுப்புச்சுவரில் ஏறி வந்து சாலையின் மறுபுறம் நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜேந்திரன், குப்புசாமி, கவிப்பிரியா ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் ஆம்னி பஸ் மோதிய வேகத்தில் ஆம்புலன்ஸ் சினிமா பாணியில் அந்தரத்தில் பறந்து சாலையோரம் உள்ள அரிசி ஆலை சுற்றுச்சுவரில் மோதி, மழைநீர் வடிகாலில் விழுந்தது. இதில் சுற்றுச்சுவர் விழுந்து சேதமடைந்தது. அதிகாலையில் தேசிய நெடுஞ்சாலையில் 4 வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion