பசுபதி பாண்டியன் நினைவு தினம்; டாஸ்மாக் கடைகள் அடைப்பு, மேலும் பல தகவல்கள்
தொடரும் பழிக்கு பழி கொலைகள்- பசுபதி பாண்டியனின் நினைவு தினம்- தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் காவல்துறை கூடுதல் உஷார்.
தூத்துக்குடி மாவட்டம் அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்தவர், பசுபதி பாண்டியன். பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழர் அரசு போன்ற கட்சிகளில் முக்கிய பொறுப்புகளை வகித்த இவர், தேவேந்திர குல வேளாளர் இளைஞர் கூட்டமைப்பு என்ற கட்சியை உருவாக்கி அதன் நிறுவனத் தலைவராக இருந்தார்.
1990ம் ஆண்டில் அந்த பகுதியில் இரு பிரினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக 31-8-90ல் சிலுவைபட்டி மிக்கெல் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதன் முதலாக பசுபதி பாண்டியன் சேர்க்கப்பட்டார். 25-12-90ல் தூத்துக்குடி அருகே கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த அந்தோணிசாமி என்ற வாலிபர் கொலை வழக்கிலும் பசுபதி பாண்டியன் பெயர் சேர்க்கப்பட்டது. அதன்பின்னர் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களிடையே பசுபதி பாண்டியன் பெயர் பிரபலமானது.
1990 களில் பழைய காயல் அருகே புல்லாவெளி கிராமத்தை சேர்ந்தவர்களும், மூலக்கரை பண்ணையார் சிவசுப்பிரமணிய நாடார் என்பவருக்கும் உப்பளத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு நடந்து வந்தது. இதில் பசுபதிபாண்டியன் புல்லாவெளி கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார்.
மேலும் பசுபதி பாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகள் 24-1-93ல் சிவசுப்பிரமணிய நாடார் மகன் அசுபதி பண்ணையாரை கொலை செய்தனர். இவர் சுபாஷ் பண்ணையாரின் தந்தையும், வெங்கடேஷ பண்ணையாரின் சித்தாப்பாவும் ஆவார். இதற்கு பழி வாங்கும் நோக்கில் 21-4-93ல் தூத்துக்குடி சுப்பையா முதலியார்புரத்தில் பசுபதி பாண்டியனை கொலை செய்ய முயற்சி நடந்தது. இதில் அவரது நண்பர் பொன்இசக்கி பலியானார். படுகாயங்களுடன் பசுபதி பாண்டியன் உயிர் தப்பினார். 8-7-93ல் சிவசுப்பிரமணிய நாடாரை பசுபதிபாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்தனர். மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே அடுத்தடுத்து மோதல்கள் நடந்தன. இதில் இரு தரப்பிலும் பலர் உயிர் இழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டியில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மனைவியுடன் தூத்துக்குடிக்கு வந்து கொண்டு இருந்த போது, எப்போதும் வென்றான் அருகே வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டப்பட்டதில் ஜெசிந்தா பாண்டியன் உயிரிழந்தார்.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டியில் வசித்து வந்த பசுபதி பாண்டியன், பழிக்குப் பழியாக, கடந்த 10.01.2012 அன்று படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையை சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்பட 18 பேர் மீது தாடிக்கொம்பு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முத்துப்பாண்டியன், நிர்மலா, ஆறுமுகசாமி, புறா மாடசாமி, பாட்சா என்ற மாடசாமி ஆகிய 5 பேர் கொலை செய்யப்பட்டனர். இதற்கிடையே பசுபதிபாண்டியன் கொலை வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
வரும் 10-ம் தேதி பசுபதி பாண்டியனின் 11 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.