நெல்லை: ஒருபுறம் வீணான 50 ஆயிரம் பனை விதைகள்.. மறுபுறம் ஒரு லட்சம் பனை விதைகளை வழங்கிய சபாநாயகர்..
”பனை விதைகளை சேகரித்து நீண்ட காலம் நடவு செய்யாமல் இருந்தால் அந்த பனை விதைகள் பலன் தராது விதை எடுத்து 10-15 நாட்களில் நட வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது”
தமிழக அரசு பனை மரம் பெருக்கு திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளையும், 1 லட்சம் பனை கன்றுகளையும் முழு மானிய தொகையுடன் விநியோகிக்க தமிழக அரசின் வேளாண் துறை சார்பில் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து ராதாபுரம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் பொதுமக்களுக்கு முழு மானியத்துடன் பனை விதைகள் வழங்க 50 ஆயிரம் பனை விதைகளை அதிகாரிகள் கொள்முதல் செய்து உள்ளனர். ஆனால் தற்போது வரை அதனை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்காத நிலையில் அதனை வீணாக வேளாண் அலுவலகத்தின் ஒரு ஓரத்தில் குவித்து வைத்துள்ளனர். இதனால் அனைத்து பனை விதைகளும் வீணான நிலையில் மண்ணோடு மண்ணாக மக்கும் சூழலில் உள்ளது. இதனை பார்த்து செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் காமராஜ் என்பவர் கூறும் பொழுது,
”தமிழக அரசு பனை மரங்களை அதிகப்படுத்த வேண்டி அரசாணை ஒன்று பிறப்பித்தது. இதனை தொடர்ந்து மானிய விலையில் பனை விதைகள் வழங்க ராதாபுரம் வேளாண்மை துறை சார்பில் பனை விதைகள் வாங்கப்பட்டது. பின்பு அதை யாருக்கும் வழங்காததால் தற்போது வீணாகி உள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார். மேலும் இது குறித்து வேளாண்துறை அதிகாரிகளை நேரில் சென்று கேட்டபோது, இதற்கு முன் இங்கு பணியாற்றிய வேளாண்துறை அதிகாரி பணிமாறுதலாகி வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்.
தற்போது பணியில் இருக்கும் அதிகாரி இன்று விடுமுறையில் இருக்கிறார் என கூறிவிட்டனர். இதற்கு முன் இருந்த அதிகாரி பனை விதைகளை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், அதேபோல பொதுமக்களும் நேரில் வந்து வாங்காததால் இது போன்று வீணாகி விட்டதாக மற்ற அதிகாரிகள் அலட்சியமாக பதிலளித்தனர் என்றும் வேதனை தெரிவித்தார். மேலும் கொள்முதல் செய்த பனை விதைகள் குறித்து பொதுமக்களுக்கோ, விவசாயிகளுக்கோ எந்தவித அறிவிப்பும் வழங்காமல் மாதக்கணக்கில் வைத்து பனை விதைகளை யாருக்கும் வழங்காமல் வீணடித்துள்ளனர். இதனால் 50 ஆயிரம் பனை விதைகள் மண்ணுக்கு உரமாகி உள்ளது. இப்படி அரசு பணத்தை விரயம் செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அங்கு வந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது ஒருபுறமிருக்க நீர் நிலைகளின் பாதுகாவலன் என அழைக்கப்படும் பனை மரங்களை பாதுகாக்கும் விதமாக தமிழக சட்டப்பேரவையில் 2021 ஆகஸ்ட்14-ல் நடந்த வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ஆண்டுதோறும் 1 லட்சம் பனை விதைகளை தனது சொந்த செலவில் அரசுக்கு அளிக்கிறேன் என்று தெரிவித்தார். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஒரு லட்சம் பண விதைகளை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஒரு லட்சம் பனை விதைகளை நான்கு லாரிகள் மூலம் அனுப்பி வைத்தார். இந்த லாரிகளில் கொண்டு செல்லப்படும் பனை விதைகள் அந்தந்த மாவட்ட தோட்டக்கலை துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீர் நிலைகளில் நடவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு கூறும்பொழுது, ”தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பு ஏற்ற உடன் தமிழகத்தின் அடையாளமாக உள்ள பனை மரங்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார். பனைமரத்தை வெட்ட வேண்டும் என்றாலும் அரசிடம் அனுமதி பெற வேண்டுமென உத்தரவு பிறப்பித்தார். ஒவ்வொரு ஆண்டும் வேளாண் துறை மூலம் பல லட்சம் பனை விதைகள் விதைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஆண்டுதோறும் ஒரு லட்சம் விதைகள்தான் தருவதாக சட்டமன்றத்தில் தெரிவித்ததை தொடர்ந்து கடந்தாண்டு ஒரு லட்சம் விதைகள் கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டும் ஒரு லட்சம் விதைகள் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவரின் மூலம் தென் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பனை விதைகளை சேகரித்து நீண்ட காலம் நடவு செய்யாமல் இருந்தால் அந்த பனை விதைகள் பலன் தராது விதை எடுத்து 10-15 நாட்களில் நட வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.