Crime: திட்டம் போட்டு நகைக்கடையை கொள்ளையடித்த இளைஞர்கள் ! சிசிடிவி மூலம் சிக்கிய 4 பேர்! காவல்துறை அதிரடி!
கடந்த 14 ஆம் தேதி காலை கடையை திறக்க வந்தபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்
நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்தவர் பொன்சுந்தரி. இவர் வடக்கன்குளம் - ராதாபுரம் மெயின் ரோட்டில் ஸ்ரீமுத்து ஜுவல்லர்ஸ் என்னும் நகைக் கடையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி காலை கடையை திறக்க வந்தபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின் கடையின் உள்ளே இருந்த தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து பணகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 29 சவரன் தங்கம் மற்றும் 15 கிலோ வெள்ளி பொருட்கள் ஒரு லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது காவல்துறையின் கண்ணில் பட்ட சிசிடிவி காட்சி அவர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குறிப்பாக அந்த சிசிடிவி காட்சியில் இளம் வயது வாலிபர் ஒருவர் டிப் டாப்பாக உடை அணிந்துக் கொண்டும் முகமூடி அணிந்து கொண்டும் திருட்டில் ஈடுபடும் காட்சி பதிவாகியிருந்தது. அதுவும் அந்த இளைஞர் கடையின் அருகே உள்ள ஜவுளிக்கடையின் வெளிப்பகுதியில் இருந்த மின் இணைப்பில் இருந்து மின்சாரம் எடுத்து இரண்டு கடை தாண்டியுள்ள நகைக்கடையின் பூட்டை கட்டிங் மிஷி கொண்டு வெட்டி கண்ணாடியை கல்லால் உடைத்து கடையின் உள் பகுதியில் இருந்த லாக்கரை உடைத்து நகையை தான் வைத்திருந்த பையில் அள்ளிக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.
சுமார் 3 மணி நேரமாக கடையின் முன்பு ஆட்கள் வருவதை நோட்டமிட்டு படுத்தும், உட்கார்ந்தும் கடையை உடைத்து நகையை திருடியுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அருகே உள்ள துணிக்கடையில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது.
இந்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் திருட்டில் ஈடுபட்டது ஒருவர் மட்டுமல்ல கூடுதல் நபர்கள் சேர்ந்து தான் இந்த மெகா கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. எனவே தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் நெல்லை மாவட்டம் கோலியான்குளம் அருகே உள்ள பள்ளவிளை பகுதியை சேர்ந்த அருண் வினோத், ஜான்சன், ஷகித் ஆகிய நான்கு பேரை 48 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் இருந்து 29 பவுன் நகை 15 கிலோ வெள்ளி பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். விசாரணையில் நான்கு பேரும் சேர்ந்து பக்காவாக பிளான் செய்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.
அதாவது நான்கு பேரில் ஒருவர் வெல்டிங் மிஷின் மூலம் கடையின் கதவை உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஒருவர் கடைக்கு அருகில் இருந்து ஆட்கள் நடமாட்டத்தை நோட்டமிட்டுள்ளார். மற்றொரு நபர் அந்த தெரு முழுவதும் இருசக்கர வாகனத்தில் வலம் வந்தபடி ஆட்களின் நடமாட்டத்தை கண்காணித்துள்ளார். நான்காவது நபர் கடைக்குள் சென்று சர்வ சாதாரணமாக அங்கிருந்து தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை பேக்கில் அள்ளி சென்றது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. நான்கு பேரும் நான்கு திசையில் இருந்தபடி தொலைபேசி தொடர்பு மூலம் கச்சிதமாக கொள்ளையடித்துள்ளனர்.
மேலும் ஏற்கனவே இந்த நான்கு பேரும் வடக்கன் குளம் அருகே உள்ள பகுதியில் மூதாட்டி ஒருவரை கொலை செய்து மூதாட்டியின் நகையை திருடிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ளனர். அதோடு இந்த நான்கு பேரும் சேர்ந்து தெற்கு கள்ளிகுளம் வடக்கன்குளம் மற்றும் வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல நாட்களாக இதுபோன்று தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது போன்று மீண்டும் மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் வெளிவராதவாறு காவல்துறையினர் அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.