கர்ப்பிணிக்காக நடத்தப்பட்ட விசேஷம்.. விருந்துக்குப்பின் ஏற்பட்ட வாந்தி, மயக்கம்.. உயிரிழந்த உறவினர்.. தீவிர விசாரணை..
திருவாரூரில் நிகழ்ச்சி ஒன்றில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று அதிகாலை உயிரிழந்ததால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருவாசல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மகன் 29 வயதான விக்னேஷ். இவரது மனைவி மாரியம்மாள். அவருக்கு வயது 26. இவர் ஐந்து மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் இவருக்கு ஐந்துக்கு மருந்து கொடுக்கும் நிகழ்வு விக்னேஷ் இல்லத்தில் நேற்று மதியம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், விக்னேஷ் மற்றும் மாரியம்மாளின் உறவினர்கள் நண்பர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்த பின்பு அவர்களுக்கு தயிர்சாதம், புளிசாதம், எலுமிச்சை சாதம், சர்க்கரைப் பொங்கல், கருவேப்பிலை சாதம் ஆகியவற்றுடன் சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டது.
இதனையடுத்து உணவருந்திய சிறிது நேரத்தில் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர். அதில் 12 பேர் உடல்நலம் குணமானதைத் தொடர்ந்து வீட்டிற்கு திரும்பி விட்டனர். இந்த நிலையில் மீதமுள்ள வேளுக்குடியைச் சேர்ந்த செல்வமுருகன் (வயது 24) சந்துரு (வயது 10) இளரா (வயது 62) செல்வகணபதி (வயது 25) பாலாஜி (வயது 22) யஷ்வந்த் (வயது 4) ஆகியோர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் கர்ப்பிணி பெண்ணான மாரியம்மாள் திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கர்ப்பிணி பெண்ணின் தந்தையான அடியக்கமங்கலத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (வயது 60) என்பவர் அடியக்கமங்கலம் தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.
இந்தநிலையில் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேளுக்குடியை சேர்ந்த செல்வமுருகன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இவர் திருவாரூர் மாவட்ட பி. எஸ். என். எல் அலுவலகத்தில் ஒப்பந்தப் பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிகழ்வில் பரிமாறப்பட்ட ஐந்து வகை சாதங்கள் கர்ப்பிணி பெண்ணான மாரியம்மாள் தாய் வீட்டிலிருந்து தயார் செய்து எடுத்து வரப்பட்டது. மேலும் விக்னேஷ் வீட்டின் தரப்பில் பரிமாறப்பட்ட சிக்கன் பிரியாணி புலிவலத்தில் உள்ள ஒரு தனியார் உணவகத்திலும், திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட வாழ வாய்க்காலில் உள்ள ஒரு உணவகத்திலும் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.