கும்பகோணம் புதிய பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து
பலத்த மழை பெய்து வரும் நிலையில், மேல்மாடியில் மழை நீர் வடியாமல் தேங்கி நின்றதால், கட்டிடத்தின் உறுதித் தன்மை கேள்வி குறியாகியுள்ளது
கும்பகோணம் புதிய பஸ் நிலைய மேற்கூரையில் மழை நீர் கசிந்ததால், சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது. அகிஷ்டவசமாக பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ஆபாய நிலையில் காட்சியளிப்பதால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். கும்பகோணம் மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் நவக்கிரஹ கோயில்கள், புராதனகோயில்கள், வரலாற்று சின்னங்கள், உலக புகழ்பெற்ற கோயில்கள் மற்றும் மூன்று மாவட்டங்களை இணைக்கும் பகுதியாக கும்பகோணம் இருப்பதால் விஷேச நாட்கள் மட்டுமில்லாது தினந்தோறும் வெளி மாநிலம், மாவட்ட, உள்ளூர் பகுதி மக்கள் பேருந்துகளில் வந்து, இறங்கி தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு செல்வார்கள். இதனால் கும்பகோணம் பழைய பஸ் நிலையத்தில் கூட்டம் நெரிசலானதையடுத்து, கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் நவீன முறையில் கான்கீரீட் கட்டிடம் கட்டப்பட்டு, புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. அதன், பின்னர் புதிய பஸ் நிலையத்திற்கு நாகை, திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம், தஞ்சை பகுதியில் இருந்து சென்னை, திருப்பதி, ஆந்திரா, பெங்களூர் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு பஸ்சுகள் சென்று வருவதால், வெளி மாநில பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
மேலும், கோவை, திருப்பூர், மதுரை, சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு கும்பகோணம் பகுதிகளில் தயாரிக்கும் பித்தளை, சில்வர் பாத்திரங்கள், பித்தளை குத்துவிளக்குகள், சேலைகள், வெற்றிலை, காய்கறிகள், வாழை இலைகள் உள்ளிட்டவைகள் தினந்தோறும், பஸ்சுகளில் சென்று வருகிறது.தினந்தோறும் சுமார் 500 க்கும் மேற்பட்ட பஸ்சுகள் வந்து செல்லும் நிலையில், கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் இரவு பகல் நேரத்தில் பயணிகளின் கூட்டம் நிரம்பியிருக்கும்.இந்நிலையில் பஸ் நிலையத்தின் காங்கீரிட் கட்டிடத்தின் கீழ் சுமார் 100 க்கும் மேற்பட்ட டீக்கடைகள், உணவு விடுதிகள், மெடிக்கல் ஷாப் உள்ளிட்ட அனைத்து கடைகளும் உள்ளன. இதே போல் பஸ் நிலையம் மேல்மாடியின் ஒரு பகுதியில் ஹோட்டல்களும் உள்ளன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கும்பகோணம் பகுதியில் பெய்து வரும் பலத்த மழையினால் புதிய பஸ் நிலையத்தின் மேல்மாடியில், மழை நீர் தேங்கியுள்ளது. அந்த நீர் வடிவதற்கு வழியில்லாததால், தெப்பம் போல் தேங்கியது. இது போன்ற அபாய நிலை பல ஆண்டுகளாக இருப்பதால், கட்டிடத்தின் கடைகளின் மேல் பகுதியும், பயணிகள் நிற்கும் மேற்பகுதியிலும் தண்ணீர் கசிந்து சொட்டியது. மேலும் கட்டிடத்தின் காங்கீரிட் பீம்களில் தண்ணீர் புகுந்துள்ளதால், விரிசல் விட்டு ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் பயணிகள் மற்றும் கடைகாரர்கள் தினந்தோறும் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகாரளித்தும் கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.இந்நிலையில் கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தின் தஞ்சாவூர் மார்க்கம் செல்லும் பேருந்துகளில் செல்வதற்காக பயணிகள் நிற்கும் பகுதியில் திடீரென மேற்கூரை பெயர்ந்து இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியிலுள்ள பயணிகள், மெடிக்கல் ஷாப்பிலுள்ள ஊழியர்கள் என அனைவரும், வெளியே ஒடினர். இதனால் மேற்கூரை பெயர்ந்து எழும்பு கூடாக காட்சியளிக்கின்றது.
மேலும், பலத்த மழை பெய்து வரும் நிலையில், மேல்மாடியில் மழை நீர் வடியாமல் தேங்கி நின்றதால், கட்டிடத்தின் உறுதித் தன்மை கேள்வி குறியாகியுள்ளது. எனவே, ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ளவர்களின் நிலை அறிந்து, உடனடியாக கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தின் மேல்மாடியில் தேங்கியுள்ள மழை நீரை, வடிவதற்கும், விரிசல் அடைந்து வரும் கட்டிடத்தையும், பெயர்ந்து விழுந்து வருவதையும் சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.