தஞ்சையில் இன்று தீத்தொண்டு நாள் விழிப்புணர்வு பேரணி: மாணவ, மாணவிகள் பங்கேற்பு
தீ விபத்தில்லாத இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசார பேரணி நடைபெற்றது.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இன்று தீத்தொண்டு நாள் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட எஸ்.பி., ராஜாராம் தொடக்கி வைத்தார்
தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப்பணிகள் துறையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-14 ஆம் தேதி தீத்தொண்டு நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டில் தீத்தொண்டு நாள் நேற்று தொடங்கி வரும் 20-ந்தேதி வரை மாநிலம் முழுவதும் நடக்கிறது. இந்த ஒரு வார காலத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அதன்படி தஞ்சாவூர் அருங்காட்சிய வளாகத்தில் இன்று தீ தடுப்பு, தீ பாதுகாப்பு மற்றும் தீ அணைக்கும் முறைகள் பற்றியும், தீயணைப்பு கருவிகளை பராமரிக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து "தீ விபத்தில்லாத இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம்" என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசார பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் முன்னிலையில் மாவட்ட எஸ்.பி., ராஜாராம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா , டவுன் டிஎஸ்பி., சோமசுந்தரம், தாசில்தார் சிவக்குமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், ஆப்தமித்ரா ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து தீயணைப்பு மீட்புப்பணிகள் துறையின் தஞ்சாவூர் மாவட்ட அலுவலர் குமார் தலைமையில் மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் ஏராளமானோர் பேரணியாக புறப்பட்டு சென்றனர். பழைய பஸ் நிலையம் வழியாக சென்று அரண்மனை வளாகத்தில் இந்த பேரணி நிறைவடைந்தது.
பேரணியின் போது தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகம் செய்தனர். மேலும் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு தீயணைப்பு கருவி நிறுவி பராமரிக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும் தீ விபத்து ஏற்பட்டால் அதில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்பது எப்படி ? என்பது குறித்து செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தஞ்சாவூர் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகேசன், நிலைய அலுவலர்கள் திருவையாறு செல்வராஜ், திருவிடைமருதூர் மாறன், கும்பகோணம் பாலசுப்ரமணியன், பட்டுக்கோட்டை செல்வம் மற்றும் சிறப்பு நிலைய அலுவலர்கள், துறை பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.
முன்னதாக நேற்று தேசிய தீ தொண்டு நாளை முன்னிட்டு தஞ்சை மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் உயிர் நீத்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மும்பை துறைமுகத்தில் கடந்த 1944ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி விக்டோரியா கப்பல் துறைமுகத்தில் பிரிட்டிஷ் சரக்குக் கப்பலில் சுமார் 1200 டன் எடையுள்ள வெடிமருந்து வெடித்து சிதறியதால் ஏற்பட்ட தீ விபத்து மீட்புப்பணியின் போது தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த 66 தீயணைப்பு வீரரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் தேதி தேசிய தீயணைப்பு தினமாக (தியாகிகள் தினம் என்றும் அழைக்கப்படுகிறது) அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி நேற்று தஞ்சாவூர் தீயணைப்பு மீட்புப்பணிகள் நிலையத்தில் கடந்த காலங்களில் தீ விபத்து மீட்புப்பணிகளில் உயிர் நீத்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் தீ தொண்டு நாளாக அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் தலைமையில் மலர்வளையம் வைத்து நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் இந்தாண்டில்,"தீ விபத்தில்லாத இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம்"என்ற தலைப்பில் வரும் 20ம் தேதி வரை ஒருவார காலத்திற்கு மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தீயணைப்பு மீட்புப்பணிகள் நிலையங்களிலும் நிலைய அலுவலர்கள் தலைமையில் அந்தந்த நிலைய எல்லைக்குட்பட்ட குடிசைப்பகுதி, கிராமங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், பொது மக்கள் கூடுமிடங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பளர் அலுவலகம், தஞ்சாவூர் தமிழ்நாடு மின் பகிர்மான கழக அலுவலகம் மற்றும் தீ அபாயமுள்ள இடங்களுக்கு சென்று பிரசாரங்கள், செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கவும், தீத்தடுப்பு, தீ பாதுகாப்பு மற்றும் தீ அணைக்கும் முறைகள் பற்றியும் தீயணைப்பு கருவிகள் நிறுவுதல், பராமரிக்கப்பட வேண்டியதின் அவசியத்தையும் தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை விதிமுறைகளை பின்பற்றி ஒருவார காலத்திற்கு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

