(Source: ECI | ABP NEWS)
Special Bus: நாளைக்கு ஊருக்கு போறீங்களா? 1035 சிறப்பு பேருந்துகள் ரெடி.. முன்பதிவு செய்வது இப்படித்தான்!
வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக 1000த்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கல்விக்காகவும், வேலைக்காகவும் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பலரும் வார இறுதி நாட்களில் விடுமுறைக்காகவும், சொந்த காரணங்களுக்காகவும் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இதனால், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திங்கள் முதல் வியாழன் வரை காணப்படும் கூட்டத்தை காட்டிலும் அதிக கூட்டம் காணப்படும்.
சிறப்பு பேருந்துகள்:
இதனால் நாளை முதல் அடுத்த 3 நாட்கள் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, வெள்ளிக்கிழமையான நாளை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டும் கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு 1035 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
எந்த தேதியில் எத்தனை பேருந்துகள்?
18ம் தேதியான நாளை மட்டம் 355 பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்பட உள்ளது. 19ம் தேதியான நாளை மறுநாளான சனிக்கிழமையில் 350 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகள் சென்னையில் இருந்து நாகர்கோயில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்செந்தூர், மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, கோவை, சேலம் ஆகிய தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளது.
அதேபோல, கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, ஒசூர், திருவண்ணாமலை, பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு நேரடியாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன்படி, நாளை 55 சிறப்பு பேருந்துகளும், நாளை மறுநாள் 55 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. மாதவரத்தில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
சென்னை மட்டுமின்றி கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை, பெங்களூர், ஈரோடு ஆகிய பல இடங்களில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. அதேபோல, வெளியூர் செல்லும் பயணிகள் மீண்டும் சென்னை திரும்ப ஏதுவாக வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
16 ஆயிரம் பயணிகள்:
சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில், இதுவரை 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். நாளை மட்டும் பயணிக்க 6 ஆயிரத்து 562 பயணிகளும், நாளை மறுநாள் பயணிக்க 2 ஆயிரத்து 805 பயணிகளும் ஞாயிற்றுக்கிழமை பயணிக்க 7 ஆயிரத்து 97 பேரும் முன்பதிவு செய்துள்ளனர்.
முன்பதிவு செய்வது எப்படி?
சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ள நிலையில், முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnstc.in/ இணையதளத்திலும், தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழக செயலி மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். தமிழ்நாட்டில் சமீபகாலமாக வார இறுதி நாட்களில் அரசுப்பேருந்துகளில் பயணம் செய்பவர்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பயணிகளின் வசதிக்காக மேலும் அதிக பேருந்துகள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாகி வருகிறது. குறிப்பாக, நீண்ட தூர பயணங்களின்போது சிறப்பு பேருந்துகளாக செமி ஸ்லிப்பர், ஸ்லீப்பர் வசதி கொண்ட பேருந்துகளை அதிகளவு இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாகி வருகிறது.





















