Israel Strikes Syria: சிரியாவை பொளக்கும் இஸ்ரேல்; ராணுவ தலைமையகம் மீது தாக்குதல் - நேரலையில் தெறித்து ஓடிய செய்தி வாசிப்பாளர்
சிரியா மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் அந்நாட்டு ராணுவ தலைமையகத்தை தாக்கியது. அப்போது அரசு தொலைக்காட்சியின் ஸ்டுடியோவில் செய்தி வாசித்துக்கொண்டிருந்தவர் தெறித்து ஓடிய வீடியோ வைரலாகியுள்ளது.

சிரியாவில் வசித்துவரும் ட்ரூஸ் இன மக்களுக்கு ஆதரவாக அங்கு தாக்குதலை நடத்தி வருகிறது இஸ்ரேல். அதில், நேற்று சிரியாவின் ராணுவ தலைமையகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது, அதன் அருகே உள்ள சிரியாவின் அரசு தொலைக்காட்சி நிறுவனத்தின் ஸ்டுடியோவில் செய்தி வாசித்துக்கொண்டிருந்த பெண் செய்தி வாசிப்பாளர், குண்டு சத்தம் கேட்டு தெறித்து ஓடிய காட்சிகள் வைரலாகி வருகிறது.
சிரியாவின் ராணுவ தலைமையகத்தை தாக்கிய இஸ்ரேல்
சிரியாவில், கடந்த ஆண்டு டிசம்பரில், இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களால் பாஷர் அல் ஆசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஹயத் தஹிர் அல் ஷியாம் அதிபராக பொறுப்பேற்றார்.
இதனை விருமபாத முன்னாள் அதிபர் அல் ஆசாத்தில் ஆதரவாளர்கள், சிரிய அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, சிரிய அரசுப் படைகள், அரசு ஆதரவு குழுக்கள் மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு பயங்கரவாதிகள், ஸ்வேய்தா மாகாணத்தில் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர். தற்போது, இஸ்ரேல் ஆதரவு பெற்ற ட்ரூஸ் இன மக்களின் கட்டுப்பாட்டில் அம்மாகாணம் உள்ளது.
ட்ரூஸ் இன மக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய இஸ்ரேல்
சிரியாவின் எல்லை மாகாணமாக ஸ்வேய்தாவில் உள்ள ட்ரூஸ் இன மக்கள், இஸ்ரேல் அரசுடன் நெருங்கிய தொடர்பை வைத்துள்ளனர். இந்த இன மக்கள் இஸ்ரேலிலும் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். இதனால், அவர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் களமிறங்கி, கடந்த 4 நாட்களாக சிரியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேலின் இந்த தாக்குதலில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ராணுவ தலைமையகம் மீது குண்டுகளை வீசி இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது.
மேலும், சிரியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகம், அதிபர் மாளிகை அருகேயும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. சிரியா மீது இஸ்ரேல் நேரடி தாக்குதலை நடத்தியுள்ள நிலையில், தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில், இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடிக்கும் சூழல் உருவாகும்.
தெறித்து ஓடிய செய்தி வாசிப்பாளர்
இஸ்ரேல் நடத்திய ராணுவ தாக்குதலில், சிரியாவின் அரசு தொலைக்காட்சி நிறுவன கட்டிடத்தின் மீதும் ஒரு குண்டு விழுந்து வெடித்துள்ளது.
அப்போது, நேரடி ஒளிபரப்பில் இருந்த ஒரு செய்தி வாசிப்பாளர், குண்டு சத்தம் கேட்டு, நிகர்ச்சியை பாதியில் விட்டுவிட்டு தெறித்து ஓடினார்.
Footage shows the moment of the Israeli airstrike in Damascus a short while ago. https://t.co/x08ISPkg1R pic.twitter.com/4fifRF0eNV
— Emanuel (Mannie) Fabian (@manniefabian) July 16, 2025
இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட நிலையில், அது வைரலாகி வருகிறது.





















