Pregnant Cow : கர்ப்பிணி அம்சவேணிக்கு ஊர் கூடி செஞ்சுவச்ச வளைகாப்பு.. ஒரு சுவாரஸ்யக் கதை
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தில் உள்ள அருள்தரும் திரிபுரசுந்தரியம்மை கோயிலுக்குச் சொந்தமான பசு மாடு. இந்த கோயில் மேலப்பட்டு கிராமத்தில் உள்ளது.
வளைகாப்பை ஊர் கூடி செஞ்சாங்களா? யாருங்க அந்த அம்சவேணி என்று கேட்கத் தோன்றுகிறதா. அட அம்சவேணி ஏதோ அம்சமான பொண்ணுன்னு நினைச்சிறாதீங்க. அம்சவேணி ஒரு கோயில் பசு. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தில் உள்ள அருள்தரும் திரிபுரசுந்தரியம்மை கோயிலுக்குச் சொந்தமான பசு மாடு. இந்த கோயில் மேலப்பட்டு கிராமத்தில் உள்ளது.
இந்த மேலப்பட்டு கிராம மக்கள் தான் அம்சவேணிக்கு வளைகாப்பு செய்ய முடிவு செய்தன. இதற்காக ஊரே கூடி பல நாட்களாக விழாவை எப்படி சிறப்பாக நடத்துவது என்று திட்டம் போட்டுள்ளனர். அதன்படி ஊர் பெண்கள் சேர்ந்து 24 வகை உணவுகளை பசுவுக்கு படைத்தனர். வளையல்கள், உணவுப் பொருட்கள் உள்பட 48 பொருட்களை தாம்பாலத் தட்டில் வைத்து சீராக எடுத்து ஊர்வலம் வந்தனர். கோயிலில் வைத்து அம்சவேணிக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.
அம்சவேணிக்கு முதலில் புனித நீராடல் கொடுக்கப்பட்டது. பின்னர் மஞ்சள், குங்குமம், சந்தனம் பூசி மாலை அணிவித்தனர். பின்னர் உணவு பதார்த்தங்கள் படைக்கப்பட்டது. அதன்பின்னர் வளைல்கள் அணிவிக்கப்பட்டு ஊர் மக்கள் அம்சவேணியிடம் ஆசி வாங்கினர். மேலப்பட்டு கிராமம் என்றும் செழிப்பாக இருக்க வேண்டிக் கொண்டனர்.
இந்த வளைகாப்பு சடங்கை செய்யும் முறை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம். வளைகாப்பு என்பது பொதுவாக கர்ப்பம் தரித்த பெண்களின் 7 அல்லது 9 மாதத்தில் ஒரு முகூர்த்த தேதியில் சுப முகூர்த்த நேரத்தில் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சியாகும். இந்த தினத்தில் கர்ப்பிணி பெண்கள் புதிய பட்டுப்புடவை உடுத்திக்கொண்டு, உறவினர் பெண்களால் நன்கு அலங்கரித்து வளைகாப்பு சடங்கு நடத்தும் இடத்தில், அப்பெண்ணின் கணவரோடு அமரவைக்கப்பட வேண்டும்.
வளைகாப்பு சடங்கு ஏழாவது அல்லது ஒன்பதாவது மாதங்களில் உறவினர்கள் சூழ வளைகாப்பு நடத்தப்படுவதால் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பற்றிய பயங்கள் மனஅழுத்தங்கள் நீங்கி அவர்களுக்கு மிகுந்த தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்கிறது என்று நம்பப்படுகிறது.
வளைகாப்பை நடத்த இரண்டு குத்து விளக்கில் தீபமேற்றி, பல்வேறு வகையான வாசம்மிக்க பூக்கள், பழங்கள், இனிப்புகள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி , வளையல் சீர்வரிசை போன்றவை வைக்கப்பட்டு, கட்டுச் சோறு வகைகளும் வரிசையாக வைக்கப்பட்டு பின்பு, முகூர்த்த நேரத்தில் வளைகாப்பு நடத்தப்படுகிறது. பெண்ணின் தாய்மாமன் அனைத்து கெடுதல்களும் நீங்குவதாக கருதி தேங்காய் உடைக்க வேண்டும்.
அதன் பின்னர் அப்பெண்ணின் கணவர் மாலை அணிவித்து, குங்குமம் இட்டு, இரண்டு கண்ணங்களிலும் மஞ்சள் பூசி, அட்சதை போட்டு தாயையும் சேயையும் வாழ்த்துவார். அதன் பின்னர் ஒவ்வொருவராக வாழ்த்துவர். இதை எல்லா மதத்தினரும் பேபி ஷவர் என்ற பெயரில் செய்கின்றனர். நடிகைகளின் பிரபலங்களின் பேபி ஷவர் நிகழ்வுகள் இணையத்தில் வைரலாவது உண்டு. ஆனால் இப்போது அம்சவேணியின் வளைகாப்பும் பிரபலமாகி வைரலாகிவிட்டது.