"விளிம்புநிலை மக்களுக்கானவர்" விஜயை பாராட்டிய திருமா.. ஓ மேட்டர் அப்படி போகுதா.!
பெரியார் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
விஜயை பாராட்டிய திருமா:
சாதி ஒழிப்பு, சமுத்துவம், பெண் உரிமை என சமூக சீர்திருத்தங்களால் தமிழ்நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு சென்ற பெரியாரின் 146ஆவது பிறந்த நாளான இன்று, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், வாழ்த்து செய்தி வெளியிட்டது மட்டும் இன்றி, சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார். கட்சியை தொடங்கியபோதிலும், கொள்கை, சித்தாந்தம் என விஜய் எதையும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இப்படிப்பட்ட சூழலில், பெரியார் திடலுக்கு நேரடியாக சென்று விஜய் மரியாதை செலுத்தி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், விஜய்க்கு எம்பி திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கூட்டணி கணக்கா?
"தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்பு இளவல் விஜயை பாராட்டி வாழ்த்துகிறேன். தந்தை பெரியாரின் பிறந்தநாளான சமூகநீதி நாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மலர்த்தூவி வணக்கம் செலுத்தியிருப்பது அவர் விளிம்புநிலை மக்களுக்கானவர் என்பதையும் அவருக்கு சமத்துவமே இலக்கு என்பதையும் உணர்த்துகிறது" என எக்ஸ் தளத்தில் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய், யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ள நிலையில், விஜய்க்கு திருமாவளவன் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
திருமாவளவனின் பிறந்தநாளன்று தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார். இப்படி, இருவருக்கும் இடையே இணக்கமான சூழல் நிலவி வரும் நிலையில், இது கூட்டணியாக உருவெடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் பல விவகாரங்களில் ஆளும் அரசுக்கு எதிராக அவ்வப்போது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் திருமா. இப்படிப்பட்ட சூழலில், 2026 தேர்தலுக்கு முன்பாகவே, திமுக கூட்டணியில் இருந்தி திருமா வெளியேறுவார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், திமுக கூட்டணியிலேயே தொடர்வோம் என திருமா கூறி வருவது குறிப்பிடத்தக்கது.