தீபாவளி பண்டிகை முன்னிட்டு சில மணிநேரங்களில் விற்று தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்..
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் டிக்கெட் முழுவதும் விற்று தீர்த்தது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல், தீபாவளி, ஆயுதபூஜை போன்ற பண்டிகைகளுக்கு சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் எளிய முறையில் செல்வதற்காக பண்டிகை நாட்களுக்கு 120 நாட்கள் முன்னதாகவே ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் .
அந்த வகையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் அக் 31 ம் தேதி வருகிறது. இதற்காக தீபாவளிக்கு முன்னதாக ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.
குறிப்பாக அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவார்கள். இதற்கு திட்டமிட்டு சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள், இரயிலில் பயணம் செய்வதை அதிக அளவில் விரும்புவார்கள்.
ஆகையால் எப்போதுமே இரயில் முன்பதிவு டிக்கெட் புக் செய்யும்போது அந்த டிக்கெட்டுகள் வேகமாக விற்று தீர்ந்து விடும். அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் இந்த டிக்கெட்டுகள் ஜெட் வேகத்தில் தீர்ந்து விடும்.
அதன்படி, அக்டோபர் 29ஆம் தேதிக்கான ரயில் முன்பதிவு டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய முன்பதிவு டிக்கெட் மிக வேகமாக விற்று தீர்ந்தது. மேலும் தட்கல் ஏசி வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கும் ஏசி அல்லாத வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
IRCTC என்ற இணையதளம் மூலமாகவும் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம். இதற்கிடையில், கடைசி நிமிட ரயில் டிக்கெட் தேவைப்பட்டால், தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.
ஐ.ஆர்.சி.டி.சி செயலியின் மூலம் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய தேவையான அனைத்து சான்றுகளையும் விரைவாக நிரப்ப வேண்டும். பயணிகள் விவரங்களைச் சேமித்தவுடன், தட்கல் சாளரம் திறந்தவுடன் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
இதன் மூலம், தட்கல் டிக்கெட்டை உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் சிரமமின்றி முன்பதிவு செய்யலாம் எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது.