CM MK Stalin: சுனாமி வேகத்தில் அரசுப்பணிகள்- முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்
CM MK Stalin: தமிழ்நாட்டில் அரசுப் பணிகள் சுனாமி வேகத்தில் நடைபெறுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முத்தான முத்திரைத் திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கூறியுள்ளார்.
CM MK Stalin: தமிழ்நாட்டில் அரசுப் பணிகள் சுனாமி வேகத்தில் நடைபெறுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முத்தான முத்திரைத் திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கூறியுள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் பேசியதாவது, “ தமிழ்நாட்டின் எதிர்கால கட்டமைப்பு வளர்ச்சிக்கு என்னென்ன திட்டங்கள் தேவையோ அவற்றை நமது அரசு கண்ணும் கருத்துமாக செயல்படுத்தி வருகிறது. மாநில பொருளாதாரத்தின் ரத்த நாளங்களாக செயல்படுவதில் மூலதன முதலீடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன அனைத்துத் துறையின் வளர்ச்சியினையும் கருத்தில் கொண்டு, அந்தந்த துறைகளின் தேவைக்கேற்ப நிதி ஒதுக்கப்பட்டது. மனிதவள மேம்பாடு. மக்கள் நல்வாழ்வு, சமூக நீதி, வறுமை ஒழிப்பு, தொழில்வளர்ச்சி என பல்வேறு காரணிகளை மையமாக கொண்டு தமிழ்நாட்டின் வளர்ச்சி இப்போது வடிவமைக்கப்பட்டு, திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
“தமிழ்நாட்டில் பல துறைகளில், பல திட்டங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது; மனிதவள மேம்பாடு, மக்கள் நல்வாழ்வு, சமூக நீதி, வறுமை ஒழிப்பு,
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 28, 2023
1/2 pic.twitter.com/YHlDBKqqMX
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் சில திட்டங்கள் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது. இவற்றையெல்லாம் கருத்திலே கொண்டுதான். இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு இன்ஜினாக உள்ளது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மனம் திறந்து பாராட்டியதை நான் இந்த நேரத்தில் நினைவுகூர விரும்புகிறேன்.
தமிழ்நாடு அரசு தொழிற்சாலைகளுக்காக உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்தி வருவதால், மேலும் தொழில் நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருவதாகவும், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் தொழில் முதலீடுகள் குவிந்த வண்ணம் உள்ளதாகவும் ஊடகங்களும், பத்திரிகைகளும் பாராட்டுகின்றன. - தலையங்கம் தீட்டுகின்றன. பாராட்டுக்கள் ஆனாலும்,விமர்சனங்கள் ஆனாலும் அவற்றை மனதிலே நிறுத்தி, இலக்கை நோக்கி நாம் அனைவரும் வெற்றி நடை போட வேண்டும்.
கடந்த முறை ஆய்வின்போது, உங்களது துறைகளுக்கான முத்திரைத் திட்டங்களில் தெரிவிக்கப்பட்ட பணி முன்னேற்றத்தினை தற்போது ஒப்பிடும்போது, குறிப்பிடத்தக்க அளவிற்கு பெரும்பான்மையான திட்டங்களில் முன்னேற்றம் காணப்பட்டாலும், ஒரு சில திட்டங்களில் இன்னும் தொய்வு நிலை இருப்பதை நம்மால் உணர முடிகிறது.
தொழிற்சாலைகளுக்கு உகந்த சூழ்நிலைகளான நிலம் கையகப்படுத்துதல், போக்குவரத்து வசதி, ஏற்றுமதிக்கான வசதிகள், உள்கட்டமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல சவால்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம்.
அத்தகைய சவால்களை சந்திப்பதில் நமது அரசு தீவிர கவனம் செலுத்தி, பிரச்சினைகளுக்கு இடம் தராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உலகளாவிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து தொழில்கள் தொடங்கிட வழி ஏற்படும். இதற்கான ஒத்துழைப்பினை அனைத்துத் துறை அலுவலர்களும் நல்கிட வேண்டுமென்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
அரசுப் பணிகள் ஆமை வேகத்தில் அல்ல சுனாமி வேகத்தில்கூட நடைபெறும் என்பதனை எடுத்துக் காட்டக்கூடிய வகையில் நாம் சில திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டியிருக்கிறோம்” என கூறினார்.